தூத்துக்குடியில் தாமிரபரணிக்கு பிறந்தநாள் விழா!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள  கருங்குளத்தில் தாமிரபரணி நதிக்கு பிறந்த நாள் பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் தாமிரபரணியைக் காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

தாமிரபரணி​​​​

தமிழகத்தில் வற்றாத ஒரே ஜீவநதி தாமிரபரணி நதிதான். இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரால் நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் குடிநீர் வசதி பெறுகிறது. இவ்வாறு  தாகத்தைப் போக்கி, விவசாயமும் செழிக்க வைக்கும் தாமிரபரணி நதிக்கு, தாமிரபரணி மகாத்மியத்தின்படி, வைகாசி விசாகம் அன்று பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்கள். மாமுனி அகத்தியர் இந்த வைகாசி விசாக நாளில்தான் தாமிரபரணி நதியை உருவாக்கினார் என்பது ஐதிகம். வைகாசி விசாக நாளான இன்று, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்று தாமிரபரணி நல இயக்கம் சார்பில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நெல்லையைச் சேர்ந்த மூத்த நாடகக் கலைஞர் அருணாசலம் தாமிரபரணி நதிக்கு பூ தூவி சுலோகம் கூறினார். அதன் பின் தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசுகையில், "தொடர்ந்து 20 ஆண்டுகளாக நாங்கள் வடமொழி நூலான தாமிரபரணி மகாத்மியம் கூறியபடி வைகாசி விசாகம் அன்று தாமிரபரணிக்கு பிறந்த நாள் விழா நடத்தி வருகிறோம். இதுவொரு விழிப்பு உணர்வு விழா. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்துக்கு தொடர்ந்து குடி தண்ணீர் தருவது தாமிரபரணிதான். ஆனால், இந்த நதி தற்போது சுரண்டப்பட்டு, சாக்கடை கலக்கப்பட்டு உயிர்காக்கும் நதி, உயிர்போக்கும் நதியாக மாறி வருகிறது. இதற்குக் காரணம் பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாததுதான். எனவே விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வண்ணம், இந்தப் பிறந்த நாள் விழாவை விழிப்பு உணர்வு விழாவாகக் கொண்டாடுகிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!