வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (28/05/2018)

கடைசி தொடர்பு:18:45 (28/05/2018)

`தூத்துக்குடியில் 2 பேருந்துகள் மீது கல்வீச்சு... கண்ணாடி உடைப்பு!’ - அச்சத்தில் மக்கள்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், இரண்டு அரசுப் பேருந்துகள் மீது நடந்த கல்வீச்சுச் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைப் பொதுமக்கள் நடத்தினர். இப்போராட்டத்தில் கலவரம் வெடித்ததன் காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இதில் 105 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்ய உறவினர்கள் அனுமதி தர மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிலர் வன்முறையைக் கையாள மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது.

இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், நகரத்தில் அமைதியைக் கொண்டு வர அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், நகரில் மெல்ல அமைதி திரும்பியது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைக்கக் கூறி மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருப்பதால், நகரில் முழுமையான அமைதி திரும்பாமல் சிறிது பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

பாதுகாப்புப் பணிக்காகப் போலீஸார் அனைவரும் தூத்துக்குடி நகரின் பல இடங்களில் குவிக்கப்பட்டிருந்தாலும், தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்னும் பதற்றமான சூழ்நிலையே நிலவிவருகிறது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளத்தில் உடன்குடியிலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இதில்
3 பேர் காயமடைந்தனர். அன்று நள்ளிரவு 1 மணி அளவில் குளத்தூர் காவல் நிலையம்மீது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இந்தப் பதற்றம் தனிந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று (28.05.2018) தூத்துக்குடியிலிருந்து நாசரேத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்துமீது முத்தையாபுரம் அருகில் மர்மநபர்கள் கல்வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை  உடைத்தனர். இதில், ஓட்டுநர் மணி , நடத்துநர் முத்து ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல், கோவில்பட்டியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி ஆறுமுகநேரி அருகில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது பைக்கில் வந்த 3 பேர் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநர் செந்தில், நடத்துநர் பிச்சைமணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. ஒரே நாளில் நடந்த அடுத்தடுத்த கல்வீச்சுச் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நடத்துனர் பிச்சைமணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. ஒரே நாளில் நடந்த அடுத்தடுத்த கல்வீச்சுச் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க