`இனிமேல் இயங்காது!’ - ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் | Tuticorin district officials seal sterlite Industries after TN government' GO

வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (28/05/2018)

கடைசி தொடர்பு:18:41 (28/05/2018)

`இனிமேல் இயங்காது!’ - ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டதையடுத்து, அந்த ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 13 பேர் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட நிலையில், மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. தூத்துக்குடியில் அமைதி திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது. இருப்பினும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதே எங்கள் கோரிக்கை என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்

இந்தநிலையில், பொது மக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடப்படுவதாகக் கூறி அதற்கான அரசாணைகளைத் தமிழக அரசு வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீஸை ஆலையின் வெளிப்புறக் கதவில் அவர்கள் ஒட்டினர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ``தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதையடுத்து, வட்டாட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. இனிமேல், இந்த ஆலை இயங்காது. அதற்கான ஆணையும் ஆலையின் வாயிற்கதவில் ஒட்டப்பட்டுள்ளது. ஆலை நிரந்தரமாக மூடப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறேன்’’ என்றார்.