`ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எந்தத் தடையுமில்லை!’ - முதலமைச்சர் விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். 

ஸ்டெர்லைட் அரசாணை குறித்து விளக்கும் முதல்வர்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கடும் எதிர்ப்பலைகள் எழுந்ததை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணைகளை வெளியிட்டது. இதையடுத்து, ஆலைக்குத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்புநிலை திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கோரிக்கை விடுத்தார். 

இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``நீண்ட நாள்களாகவே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனத் தூத்துக்குடி மக்கள் கோரிக்கை விடுத்து வந்ததோடு, போராட்டங்களையும் நடத்தி வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என என்னையும், துணை முதலமைச்சரையும் சந்தித்துப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து, அரசாணைகள் வெளியிடப்பட்டது. மக்களின் உணர்வுகளை மதித்து இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது’’என்றார். 

அப்போது, வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளதே எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், ``ஆலை தொடர்பான வழக்கு மட்டுமே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை’’ என்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்பு எடுத்த நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றத்தின் வாயிலாக ஸ்டெர்லைட் நிர்வாகம் முறியடித்துள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ``கற்பனை கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க முடியாது’’ என முதல்வர் கூறினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!