வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/05/2018)

கடைசி தொடர்பு:22:00 (28/05/2018)

தென்மேற்குப் பருவமழை தொடக்கம்? - அருவிகளில் கொட்டும் தண்ணீர்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கி இருப்பதால் பருவமழை தொடங்கி இருக்குமோ என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கி இருப்பதால் பருவமழை தொடங்கி இருக்குமோ என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

பருவமழை தொடக்கம்?

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். அதனால் இந்த அருவிக்கு எப்போதும் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் நெல்லை மாவட்ட மக்கள் மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மணிமுத்தாறு அருவிக்கு வருகிறார்கள். 

இதனால் கடந்த சில தினங்களாகவே மணிமுத்தாறு அருவியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை முதலாகவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்து தடாகத்தில் விழுவதால் பாதுகாப்பு காரணம் கருதி சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். 

இருப்பினும், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேற முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது. அதனால் அங்கு குளித்த பலரும் வெளியேறிவிட்ட நிலையில், சுரண்டையைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் அருவியில் இருந்து வெளியே வர வழியில்லாமல் சிக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்த வனத்துறையினரும் பொதுமக்களும் பத்திரமாக மீட்டார்கள்.  

சாரல் மழை

குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் கொட்டத் தொடங்கி இருக்கிறது. சில்லென்ற காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் தென்மேற்குப் பருவமழை தொடங்கி விட்டதாகவே குற்றாலம் பகுதி மக்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார்கள். அதனால், அருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தற்காலிகக் கடைகளை சீரமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடக்கத் தொடங்கியுள்ளன.