வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/05/2018)

கடைசி தொடர்பு:21:05 (28/05/2018)

`ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்குச் சூடு!’ - கண்ணீர்விட்டுக் கதறிய பெற்றோர்

ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறுவனை, அருகில் வசிப்பவர்கள் சூடு வைத்துக் கொடுமைப்படுத்துவதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட சிறுவனை, அருகில் வசிப்பவர்கள் சூடு வைத்துக் கொடுமைப்படுத்துவதாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

ஆட்டிஸம்

கோவை, பூமார்க்கெட் அருகே உள்ள தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவரது மனைவியின் பெயர் பெரியமுத்து. இவர்களுக்கு, 12 வயதில் ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட அரவிந்த் என்ற மகன் இருக்கிறார். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், தங்களை அந்தப் பகுதியிலிருந்தே விரட்டுவதற்காக, தங்களது மகன் மீது தாக்குதல் நடத்துவதாக, அரவிந்தின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

``எங்க சொந்த ஊர் மதுரை. கோவைக்கு வந்து 12 வருஷம் ஆச்சு. தெப்பக்குளம் கிட்ட போக்கியத்துக்குக் குடி இருக்கிறோம். அக்ரிமென்ட் முடிஞ்சு போச்சு. நாங்க மேற்கொண்டு பணம் கொடுக்கத் தயாரா இருந்தும், எங்க ஹவுஸ் ஓனர், பணம் வாங்க மறுக்கறாங்க. அதே நேரத்துல நாங்க கொடுத்த பணத்தையும் கொடுக்க மறுத்து, வீட்ட காலி பண்ணுங்கனு சொல்றாங்க. அவங்க சொந்தக்காரங்கதான், எதிர்  வீட்ல, குடியிருக்காங்க. அவங்கள விட்டு கொடுமைப்படுத்தறாங்க. பையன் வெளிய வந்தா கல் எடுத்து வீசறாங்க. முகத்துல சூடு வெக்கிறாங்க. அந்த ஏரியால எங்கயும் வீடு கிடைக்க மாட்டீங்குது. ப்ரோக்கருங்க கிட்டயும் எங்களுக்கு வீடு பார்க்கக் கூடாதுனு சொல்லி வெச்சுருக்காங்க. போலீஸ் கிட்ட புகார் அளிச்சும் நடவடிக்கை இல்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்கிறார் அரவிந்தின் தந்தை சூரிய பிரகாஷ்.

``என்ன பிரச்னைனே தெரியல. நாங்க காலைல வேலைக்குப் போனா, சாய்ங்காலம்தான் வருவோம். என் பையனும் யார் வீட்டுக்கும் போக மாட்டான். நாங்க வெளிய வந்தாலே கொலை செஞ்சுருவோம், உங்கள வாழ விட மாட்டோம்னு மிரட்டறாங்க. கொஞ்ச நாளுக்கு முன்னாடி, என் பையனுக்குச் செருப்பு மாலை மாட்டி விட்டாங்க. இப்ப போன வாரம், எங்க வீட்டு ஜன்னல் கிட்ட இருந்த பையன் மூஞ்சில சூடு வெச்சுட்டாங்க. நான் பார்த்ததும், அந்த ஆள் நேரா, எதிர் வீட்டுக்குத்தான் ஓடினார். அவங்கக் கிட்ட போய் கேட்டாலும், அப்படித்தான் பண்ணுவோம்னு சொல்றாங்க. இப்ப என்னையும் தகாத வார்த்தைல திட்டி, சேலைய உருவ வராங்க. அரசுதான் எங்களுக்கு நல்ல வழிய காட்டணும். இல்லாட்டி தற்கொலை செஞ்சு சாவறதத் தவிர வேறு வழியில்ல” என்றார் பெரியமுத்து. 

இதுகுறித்து விளக்கம் கேட்க ஆர்.எஸ்.புரம் போலீஸாரை தொடர்பு கொண்டோம்.  ஆனால், அவர்கள் நமது அழைப்பினை ஏற்கவில்லை.