வெளியிடப்பட்ட நேரம்: 03:45 (29/05/2018)

கடைசி தொடர்பு:09:24 (29/05/2018)

விருத்தாசலத்தில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்ய முயற்சி - காதலன் கைது!

கொங்கராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்கிற பிரபாகரன்(25) என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக விஜய்யிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்காவில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்த அசோகனின் மகள் அசோனா (20). இவர், விருத்தாசலம் சரோஜினிநாயுடு நகர் முதல் தெருவில் உள்ள பல்முனை வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். நேற்று காலை, வேலைக்குச் செல்ல உளுந்தூர்பேட்டையிலிருந்து விருத்தாசலத்துக்கு பேருந்தில் சென்றுள்ளார். பின்னர், விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இறங்கி, அலுவலகத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அலுவலகம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த பைக் ஒன்று அசோனாவின் அருகில் வந்து நின்றது. உடனே பைக்கில் வந்த இளைஞர் திடீரென அசோனாவின்  கழுத்தில் கத்தியால் அறுக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த அசோனா கூச்சல் போட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த நபரைப் பிடிப்பதற்குள், அந்த நபர் வேகமாக பைக்கில் பறந்து சென்றுவிட்டார். இதில் அசோனாவின் கழுத்தில் கத்தி பட்டதில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கொலை முயற்சி செய்த விஜய்

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது கொங்கராம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்கிற பிரபாகரன் (25) என்பவருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக விஜய்யிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அசோனா விருத்தாசலத்தில் உள்ள இந்த கம்பெனிக்கு வேலையில் சேர்ந்துள்ளார்.

அப்போதும் விஜய் கள்ளக்குறிச்சியில் இருந்து விருத்தாசலம் வந்து தினமும் அசோனாவிடம் பேச முயற்சி செய்துள்ளார். அவரிடம் அசோனா  பேசாமல் தொடர்ந்து வெறுப்பையே காட்டி வந்துள்ளார். இதனால் அசோனாவை பழிவாங்கும்  நோக்கத்தில் அவரைக் கடந்த சில நாள்களாகப் பின் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் நேற்று  வேலைக்குச் செல்லும் வழியில் அவரைப் பின்தொடர்ந்து வந்த விஜய் அவரின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார், என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அசோனா கொடுத்த விருத்தாசலம் புகாரின் பேரில் விருத்தாசலம் போலீஸார் விஜய் என்கிற பிரபாகரன் மீது வழக்கு பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில், விருத்தாசலம் எருமனூர் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவர் சரியான பதில் தரவில்லை. இதில் சந்தேகமடைந்த போலீஸார் அவரைக் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அந்த வாலிபர் பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர் விஜய் என்பது தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அசோனாவும், விஜய்யும் காதலித்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக அசோனா, விஜய்யிடம் சரியாக பேசவில்லை. மேலும், தொடர்ந்து பேச முயன்றும் வெறுப்பைக் காட்டியதால் பழி வாங்கும் நோக்கில் எனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது எனக் கத்தியால் குத்தியதாகக் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 30-ம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பேச மறுத்த காதலியை கழுத்தைக் காதலன் அறுத்த சம்பவம் நடந்த நிலையில், இன்று விருத்தாசலத்திலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.