துப்பாக்கிச் சூடு பயத்தால் வெறிச்சோடிய ஈரோடு கலெக்டர் அலுவலகம்..!

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு பயத்தால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தோல், சாயக்கழிவு பிரச்னை, குடிநீர்ப் பிரச்னை, அடிப்படை வசதி, உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், போராட்டம் என திங்கள்கிழமை தோறும் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், எப்போதுமே பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக, கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் தீக்குளிக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருவதால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் திணறடித்துவந்தனர்.

துப்பாக்கிச் சூடு

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராடிய மக்கள்மீது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள்ளே போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. தற்போது, தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்பிவரும் வேளையில், அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டின் பயம் தமிழகத்தின் பல இடங்களில் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில், ஈரோட்டில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், நேற்று ஆட்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. போராட்டம், ஆர்ப்பாட்டம், கோஷம் போடுதல் என எதுவும் நடைபெறவில்லை.

தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்து ஏதாவது கட்சிகள் மற்றும் அமைப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்பிருக்கிறது எனக் கருதிய மாவட்ட போலீஸார், வழக்கத்திற்கு மாறாக கூடுதல் போலீஸாரை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் நிற்கவைத்திருந்தனர். கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழைய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த கெடுபிடிகளையெல்லாம் பார்த்த பொதுமக்கள் பதறிப்போய் உள்ளனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!