`ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகப் பொய் பரப்புரை' - இழப்பீடு கேட்டு அமைச்சருக்கு கீதாஜீவன் நோட்டீஸ்! | dmk mla geetha jeevan give notice to minister jayakumar for demand one crore rupees

வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (29/05/2018)

கடைசி தொடர்பு:09:58 (29/05/2018)

`ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகப் பொய் பரப்புரை' - இழப்பீடு கேட்டு அமைச்சருக்கு கீதாஜீவன் நோட்டீஸ்!

ஸ்டெர்லைட் ஆலையில் தனக்கு பங்கு இருப்பதாகப் பொய் பரப்புரை வெளியிட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்டும், இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடி தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

geetha jeevan”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தி.மு.க எம்.எல்.ஏ., கீதாஜீவனுக்கு கான்ட்ராக்ட் இருப்பதாகவும், 600 லாரி ஓடுகிறது எனவும், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோவின் மருமகனுக்கும் கான்ட்ராக்ட் உள்ளதாகவும் ஒரு தகவல் உள்ளது”  என அமைச்சர் ஜெயக்குமார் மீடியாக்களிடம் சில நாள்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தார்.  அமைச்சர் ஜெயக்குமாரின் இப்புகார் குறித்து எம்.எல்.ஏ., கீதாஜீவனிடம் நாம் கேட்டபோது, ”அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரம் இல்லாமல் என்மீது பொய்ப் புகார் பரப்பிவருகிறார். ஸ்டெர்லைட் ஆலையில் எனக்கோ, என் குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்வித கான்ட்ராக்ட்டும் இல்லை. ஒரு லாரி கூட ஓடவில்லை. இதை அவர் நிரூபித்தால், அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என பதிலளித்தார். இதுகுறித்து நாம் ஏற்கெனவே விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்.எல்.ஏ., கீதாஜீவன் தனது வக்கீல்மூலம் அளித்துள்ள நோட்டீஸில், “ கீதாஜீவன் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் பதவி வகித்துவருகிறார். தமிழக முன்னாள் அமைச்சரான இவரது சேவையைப் பாராட்டி, பொதுமக்கள் அவரை 2-வது முறையாக எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தனக்கென்ற செல்வாக்குடன் அவர் திகழ்ந்துவருகிறார்.

அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில்,  ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் கான்ட்ராக்ட் எடுத்துள்ளதாகப் பொய்யான தகவலை jayakumarமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்நோக்கம்கொண்டு தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராகத் தொடர்ந்து கீதாஜீவன் எம்.எல்.ஏ., போராடிவருகிறார். கடந்த மே 22-ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், அமைதியாக ஊர்வலமாகச் சென்று தனது எதிர்ப்பு நிலையை பதிவுசெய்துள்ளார். அவர், அந்தத் தொழிற்சாலைக்கு என்றும் ஆதரவாகச் செயல்பட்டதில்லை.

இந்நிலையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் கீதாஜீவன் எம்.எல்.ஏ., கான்ட்ராக்ட் எடுத்திருப்பதாகவும், அவரது பெயரில் 600 வாகனங்கள் ஓடுவதாகவும் தெரிவித்துள்ளது சட்டப்படி தண்டனைக்குரியது மற்றும் கண்டனத்திற்குரியது. எனவே, ஒரு வார காலத்திற்குள் மன்னிப்பு கேட்பதுடன், மனவேதனைக்கு இழப்பீடாக ரூ.1 கோடி செலுத்த வேண்டும். இல்லையென்றால், அமைச்சர் ஜெயக்குமார் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை நீதிமன்றங்களில் தொடுக்க நேரிடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க