காஞ்சியில் கருடசேவை... விழாக்கோலம் பூண்ட வரதர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கருடசேவை இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரதரை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருடசேவை, இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வரதரைக் காண வந்த பக்தர்களால் திக்குமுக்காடியது காஞ்சிபுரம். 

கருடசேவை

108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முக்கியனமான தளம். இங்கு, வருடத்துக்கு மூன்று கருட சேவை நடைபெறும் என்றாலும், வைகாசி மாதம் வரும் கருடசேவை மிகச்சிறப்பு. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா, கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினம் ஒரு வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார். இந்தப் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாகக் கருதப்படும் கருடசேவை, இன்று காலையில் சிறப்பாக நடைபெற்றது. 
அதிகாலை 3 மணிக்கு பெருமாள் வெளியே வந்தார். அலங்காரம் முடிந்த நிலையில், கோயில் உள்பகுதியில் உள்ள ஆழ்வார்கள் சந்நிதியில் வைத்து பாசுரம் பாடினர்.

சுவாமி, கோயிலில் இருந்து வீதியுலா புறப்படும் நேரத்தில், கருட வாகனத் தண்டு உடைந்துவிட்டது. இதனால், ஒருமணி நேரம் காலதாமதமாகத்தான் இந்த ஆண்டு புறப்பட்டார் வரதர். கோபுரவாசல் தரிசனம் முடித்த வரதர், ரங்கசாமி குளம், விளக்கடி கோயில் தெரு, பிள்ளையார் பாளையம், புத்தேரித் தெரு வழியாக, கச்சபேஸ்வரர் கோயில் அருகே உள்ள மண்டபத்திற்கு வந்தார். பெருமாளை வழிபடுவதற்கு வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. வரதர் உற்சவத்தால், காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!