வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (29/05/2018)

கடைசி தொடர்பு:11:15 (29/05/2018)

வீட்டில் நகைகளைப் பதுக்கிவைத்த வங்கி ஊழியர்கள்! -12 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்

திருவள்ளூர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கொள்ளை போன எட்டுக் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், நகைகளைக் கொள்ளையடித்த 3 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். 

திருவள்ளூர் ஆயில் மில் அருகில், பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கடந்த எட்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. நேற்று  காலை 10 மணிக்கு வங்கியைத் திறந்து பார்த்தபோது, அடமானம் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் திறக்கப்பட்டிருந்தன. அப்போது, வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட சுமார் எட்டுக் கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகள் லாக்கரில் கள்ளச் சாவி போட்டுக் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவர, அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த துணை மேலாளர் பானு, திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சிபிச்சக்கரவர்த்தி, கொள்ளை நடந்த வங்கிக்கு வந்து விசாரணை நடத்தினார். 

அப்போது, வங்கியில் உள்ளவர்களுக்கு கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்களிடம் தனியார் இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில், வங்கியில் உதவியாளராகப் பணியாற்றிய செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், நீல்கிரீஸ் சூப்பர் மார்க்கெட் செக்யூரிட்டி ஜெய்கணேஷ் மற்றும் கௌதம் ஆகியோர் நகைகளைக் கொள்ளையடித்தது உறுதிசெய்யப்பட்டது.  மேலும், கொள்ளை அடிக்கப்பட்ட நகை, விஸ்வநாதன் வீட்டில் ஒரு பேக்கில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளை நடந்த 12 மணிநேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டது மிகப்பெரிய சவால் என போலீஸார் தெரிவித்தனர்.