வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (29/05/2018)

கடைசி தொடர்பு:12:42 (29/05/2018)

டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா ஆகாதா? - ஐ.ஆர்.சி.டி.சி புதிய அறிமுகம்

ரயில்களில் முன்பதிவுசெய்யப்படும் டிக்கெட்டுகள், உறுதியாகக் கிடைக்குமா என்பதை இனி உடனுக்குடனே தெரிந்துகொள்ளலாம். இதற்கான புதிய வசதியை ரயில்வே அமைச்சகம் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் அறிமுகம்செய்துள்ளது. 

ஐ.ஆர்.சி.டி.சி

ஒவ்வொரு முறையும் ரயில் டிக்கெட்டுகளை புக் பண்ணும்போது, டிக்கெட் இருப்பு இருக்கிறதா, முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் உறுதியாகக் கிடைக்குமா அல்லது காத்திருப்புப் பட்டியலிலே நீடிக்குமா என்ற குழப்பத்துடனேயே பயணிகளின் டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்வார்கள். இவ்வாறு இனி பதற்றப்படவேண்டியதில்லை. முன்பதிவுசெய்த டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்படுமா என்பதை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளமே யூகித்துச் சொல்லிவிடும். இதற்கேற்ப, இணையதளம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

ஐ.ஆர்.சி.டி.சி

இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி கூறுகையில், 'ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த, புதிய இணையதளச் சேவையின்மூலம் காத்திருப்புப் பட்டியலில் உள்ள தங்களது டிக்கெட்டுகள் உறுதிசெய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதைப் பயணிகள் உடனுக்குடனே தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், ஆர்.ஏ.சி டிக்கெட்டுகள் உறுதியாகும் வாய்ப்பையும் கணித்துக்கொள்ள முடியும். இந்தப் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில் சில சலுகைகளையும் ரயிவே துறை வழங்கியுள்ளது' என்றார். 

ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் ஓராண்டுக்கு முன்பே இந்தப் புதிய இணையதளச் சேவை பற்றிய யோசனையை அறிவித்து, இதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தார். இதன் காலக்கெடு சென்ற ஆண்டு நிறைவடைந்தநிலையில், இப்போதுதான் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறை, நேற்று நள்ளிரவு முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.