வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (29/05/2018)

கடைசி தொடர்பு:12:28 (29/05/2018)

சிறுநீரகக் கோளாறால் பாதிப்பு! அரசு மருத்துவமனையில் வேல்முருகன் அனுமதி

சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

வேல்முருகன்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி மக்கள் சுமார் இரண்டு ஆயிரம் பேர் திரண்டனர். இவர்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட அதுவே, கலவரமானது. பொதுமக்களைக் கலைக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவந்தனர்.  ஸ்டாலின், டி.டி.வி தினகரன், வைகோ, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும், பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கடந்த 25-ம் தேதி மாலை தூத்துக்குடி பயணமானார். ஆனால், அவரை தூத்துக்குடிக்குள் நுழைய விடாமல் தடுத்ததோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் போலீஸ் கைது செய்தது. அப்போது அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் ஒரு பழைய மண்டபத்தில் போலீஸார் அடைத்தனர். அப்போது போலீஸுக்கும் வேல்முருகனுக்கு வாக்குவாதம் ஏற்படவே, கழிவறை உள்ளிட்ட வசதிகள் மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வேல்முருகன் தலைமையில் நடந்த காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தின்போது உளுந்தூர் பேட்டை டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் வேல்முருகன் உள்ளிட்டோர் மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை மேற்கோள்காட்டி தூத்துக்குடியில் சிறைவைக்கப்பட்டிருந்த அவரை 26-ம் தேதி அதிகாலை விழுப்புரம் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். 

இந்தத் தகவல் அவரது தொண்டர்களிடம் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் மாலை 3 மணியளவில் அவர் திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் அளித்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைத்தபின்னும் தண்ணீர் கூடக் குடிக்காமல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த வந்த அவரை நேற்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில்,  ``தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும்" எனக் கூறி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வைகோ வலியுறுத்தினார். அவரின் வேண்டுகோளையடுத்து மோர் குடித்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் வேல்முருகன். 

இருப்பினும் தொடர்ந்து 4 நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததால் சோர்வான நிலையில் காணப்பட்டார். இதனால் அவரை வட சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனை குறித்து அறிக்கை வந்ததும், அதில் வேல்முருகனுக்குச் சிறுநீரக கோளாறு உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். நேற்றிரவு முதல் இன்று வரை சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். இதையடுத்து தனி அறையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக கோளாற்றை சரி செய்வதற்கான சிறப்பு சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். இந்தத் தகவல் அவரது கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க