வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (29/05/2018)

கடைசி தொடர்பு:13:55 (29/05/2018)

`ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்றவும்’ - காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தல்

ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது நிரந்தரமான தீர்வாகாது எனவும் தனி சட்டம் இயற்றினால் மட்டுமே ஆலையை நிரந்தரமாக மூட முடியும் எனவும் காவிரி உரிமை மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் இப்பகுதி மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வந்தார்கள். இதனால் இந்த ஆலையை மூடக்கோரி இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். இவர்கள்மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இது உலகளவில் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது வெறும் கண் துடைப்பு நாடகம்' என்கிறார் காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகரான மருத்துவர் பாரதிச்செல்வன். இதுகுறித்து அவரிடம் பேசியபோது, ``அரசாணை வெளியிட்டாலும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் மீண்டும் ஆலையை இயக்குவதற்கு வாய்ப்புள்ளது. மாநில அரசுகள் வெளியிடும் அரசாணையை நீதிமன்றம் செல்லாது என அறிவிக்க வாய்ப்புண்டு. தமிழ் பயிற்று தொடர்பாகத் தி.மு.க ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையைச் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையிலும் ஏற்படலாம்.

எனவே, ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் மக்களின் எதிர்ப்பு காரணமாகச் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாகவும் இதனால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாகக் கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதைச் செய்தால்தான் சட்ட ரீதியான பாதுகாப்புக் கிடைக்கும். ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை நாட முடியாது. தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையால் மட்டுமே இங்குள்ள மக்களுக்கு நிரந்தர நிம்மதி கிடைத்துவிடாது'' என்கிறார்.