`தேவையில்லாத பாடங்களை நடத்தக் கூடாது' - சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்குக் கடிவாளம் போட்ட உயர் நீதிமன்றம்!

சி.பி.எஸ்.இ பள்ளிகள் தேவையில்லாத பாடங்களை நடத்தக் கூடாது. மீறினால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றம்

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்க வேண்டும், சி.பி.எஸ்.இ பள்ளிகளை நெறிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ``சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது. இதேபோல் என்.சி.ஆர்.டி பாடத் திட்டங்களில் உள்ளதைத் தவிர தேவையில்லாத பாடங்களை நடத்தக் கூடாது. குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது. 

புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக நிலுவையில் உள்ள மசோதாவை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மாணவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத வகையில் கல்வியை வழங்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் பள்ளிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக ஆய்வு செய்ய பறக்கும் படை அமைத்து அனைத்துப் பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும். மேலும், 4 வார காலத்துக்குள் இதுகுறித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தார். ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!