வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (29/05/2018)

கடைசி தொடர்பு:14:18 (29/05/2018)

``கலைஞர் இருந்திருந்தால் இப்படி நடக்காது" பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்ற பி.ஜே.பி.தலைவர்கள் போலில்லாமல் 

``கலைஞர் இருந்திருந்தால் இப்படி நடக்காது

த்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், எதையும் எப்போதும் வெளிப்படையாகப் பேசிவிடுகிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடுகிறவர்களை பி.ஜே.பி. தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், ''ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், அதற்காக மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான்'' என்று கூறி தன் கட்சியினரையே அவர் அதிர வைத்தார்.

பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று நான்காண்டு நிறைவடைந்துள்ளதை ஒட்டி, மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவர், "மத்தியில் பி.ஜே.பி. அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. உலக அளவில் நம் நாடு மதிக்கப்படும் வகையிலும், நாட்டின் கடைக்கோடியில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையிலும் பல திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்'' என்று ஆட்சியின் சாதனைகளைப் பெருமிதமாகப் பட்டியலிட்டவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். 

பொன் ராதாகிருஷ்ணன்

``தூத்துக்குடி போராட்டத்தின்போது தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருந்தது?"

``போராட்டம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு கண்காணிக்கத் தவறிவிட்டது. தமிழக அரசு செயல்படாமல் உள்ளது". 

``செயல்படாத, மக்களுக்கு எதிரான இந்த அரசை பி.ஜே.பி. பின்னால் இருந்து இயக்குவதாக சொல்லப்படுகிறதே?''

``இந்த அரசுக்குப் பின்னணியிலும், முன்னணியிலும் பி.ஜே.பி. இல்லை. தவறாக அப்படிச் சொல்லப்படுகிறது". 

``போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணம் யார்?"

``தமிழகத்தில் நடைபெறும் பல போராட்டங்களில் பிரிவினைவாதம் பேசும் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளார்கள் என்று ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதே நான் கூறினேன். ஆனால், அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவுதான் தமிழகத்தில் பல பாதிப்புக்களை உருவாக்கி வருகிறது. இவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இதுபோன்ற பிரிவினைவாதிகளுடன் மறைமுகமாகத் தொடர்பு வைத்திருக்கிறார். தி.மு.க. தலைவர் கலைஞர் செயல்பாட்டில் இருந்திருந்தால் இதுபோன்று நடக்காது".

பொன்.ராதாகிருஷ்ணன்

``பி.ஜே.பி-க்கு எதிராகப் போராடுகிறவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது ஏன்? "

``அப்படி இல்லை. தனித்தமிழ்நாடு கேட்கும் பிரிவினைவாதிகள் சமீபகாலமாக பல போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களால் பல ஆபத்துகள் உள்ளன. அவர்களைக் கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். 1980-ம் ஆண்டுகளில் நக்ஸல் பிரச்னை அதிகமிருந்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், வால்டர் தேவாரத்துக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்து நக்ஸலைட்டுகளை ஒழித்தார். கப்பலோட்டிய தமிழனை சிறையில் அடைத்த கலெக்டர் ஆஷுக்கு வீர வணக்கம் என்று சிலர் போஸ்டர் அடிக்கிறார்கள். இப்படியே விட்டால், தீவிரவாதிகள் தமிழக தேசத் தலைவர்களை இழிவுபடுத்துவார்கள். இதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை. பிரிவினைவாதம் தமிழகத்தில் மேலோங்கி வருவது ஆபத்தானது. விரைவில் மத்திய அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்." 

``நீட், காவிரி எனப் பல பிரச்னைகளில் தமிழர்களுக்கு எதிராக பி.ஜே.பி இருப்பதாக சொல்லப்படுகிறதே...?" 

``தமிழர்களின் நலனுக்காகவே பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அது தவறாகப் பரப்பப்படுவதால் பி.ஜே.பி-யை விமர்சிக்கிறார்கள். விரைவில் மக்கள் புரிந்துகொள்வார்கள்".

``பல திட்டங்கள் மூலம் பிரதமர் மோடி, சாதனை செய்துள்ளதாகக் கூறுகிறீர்கள். பெட்ரோல் விலை ஏற்றத்திலும் உலக சாதனை என்று சொல்லலாமா?"

``பல  நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் பெட்ரோல் விலை குறைவுதான். மாநில அரசுகள்தான் பெட்ரோலை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வர தயக்கம் காட்டி வருகிறது. மாநிலங்களின் உரிமையில் தலையிடக் கூடாது என்பதால், மத்திய அரசு பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யவில்லை".

``கர்நாடகாவில் பி.ஜே.பி-யின் திட்டம் தோற்றது ஏன்?"

``நியாயப்படி அங்கு பி.ஜே.பி-தான் ஆட்சி அமைத்திருக்க வேண்டும். விரைவில் காங்கிரஸ் கட்சியிலுள்ள எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சியை விட்டு வெளியே வந்துவிடுவார்கள்".

``காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பி.ஜே.பி-க்கு வந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்களா?"

``அப்படிச் சொல்ல முடியாது", என்று சுருக்கமாக முடித்துகொண்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்