வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (29/05/2018)

கடைசி தொடர்பு:14:55 (29/05/2018)

`ஸ்டெர்லைட் கவலையை விடுங்கள்' - தூத்துக்குடியில் மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய ஆளுநர்

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

ஆளுநர்

'ஸ்டெர்லைட் ஆலையை மூடும்வரை வீடு வாசல் திரும்ப மாட்டோம்' என்ற கோஷத்துடன், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தைப் பொதுமக்கள் கடந்த 22-ம் தேதி முற்றுகையிட்டனர். அப்போது, பேரணியாகச் சென்ற பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கல்வீச்சு நடந்ததுடன், வன்முறை வெடித்தது. அதனால் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்துவரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், போலீஸ் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடிக்கு வருகைதந்தார். கலவரத்தின்போது போலீஸ் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செல்வசேகரன் என்பவரது வீட்டுக்குச் சென்றார். சாயர்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பேய்க்குளம் கிராமத்தில், செல்வசேகரன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், கலவரத்தில் குண்டடிபட்டும் போலீஸ் தடியடியில் காயமடைந்தும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, காயமடைந்தவர்களும் அவர்களின் உறவினர்களும் போலீஸார் எந்த முன்னெச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் புகார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அவரிடம் பேசுகையில், `ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா என்றும் தற்போதைய உத்தரவுமூலம் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் அச்சத்துடன் கேட்டார்கள். அவர், `ஆலையை மூடுவதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பித்துவிட்டது. அதனால், ஆலைகுறித்த கவலை இல்லாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்' எனக் கேட்டுக்கொண்டார். 

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்க முயன்றனர். ஆனால், அவர் காரில் ஏறிச் சென்றுவிட்டார். ஆளுநரின் வருகையைத் தொடர்ந்து, தூத்துக்குடி நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.