வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (29/05/2018)

கடைசி தொடர்பு:15:15 (29/05/2018)

படையெடுக்கும் நொய்யல்... கோவையில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை..!

கோவையில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து, இன்று காலை முதல் கோவையில் மழை பெய்துவருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிறுவாணி

கோவைக்கு இது மிகவும் சிறப்பான வருடம். பொதுவாக, கோவைக்கு தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில்தான் அதிக மழையைக்  கொடுக்கும். ஆனால் இந்த ஆண்டு, கோடைக்காலத்திலேயே நல்ல மழைப்பொழிவை கோவை பெற்றுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல, நீர் நிலைகளிலும் தண்ணீரின் அளவு, கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சூழல் சிறப்பாக இருக்கிறது.

இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சாடிவயல், வெள்ளியங்கிரி போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. இன்று காலை முதலே, மேகக் கூட்டம் கூடி மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், அந்தப் பகுதிகளில் வானவில்லும் தென்பட்டது. இதனால், வெப்பம் கணிசமாகக் குறைந்து, இதமான சூழல் நிலவிவருகிறது. தென்மேற்குப் பருவ மழை தொடங்கும்போதுதான் இதுபோன்ற அறிகுறிகள் தென்படும். எனவே, கோவையில் பருவமழை தொடங்கிவிட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரும் ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகுதான் தென்மேற்குப் பருவமழை முழுமையாகத் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், கோவை போன்ற மாவட்டங்களில், பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனினும் இதுவரை பருவமழை தொடங்கிவிட்டது என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

சிறுவாணி

படங்கள்: சிறுவாணி விழுதுகள்

 தொடர் மழையால், கோவை குற்றாலத்துக்கு நீர்பெருக்கு அதிகரித்துள்ளது. மேலும், நொய்யலின் பிறப்பிடமான சின்னாறு மற்றும் அதன் கிளை நதிகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், இந்த தென்மேற்குப் பருவமழை காலகட்டத்திலும், கோவைக்கு நல்ல மழைப்பொழிவு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, மழை நீரை சேகரிப்போம்; மண் வளத்தைப் பாதுகாப்போம்.