‘துப்பாக்கிச் சூடு’ வார்த்தையை ஏன் பயன்படுத்தவில்லை?- முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி | Dmk Protest Against thoothukudi gunfire outside the tn Assembly

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (29/05/2018)

கடைசி தொடர்பு:15:34 (29/05/2018)

‘துப்பாக்கிச் சூடு’ வார்த்தையை ஏன் பயன்படுத்தவில்லை?- முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

'தமிழக அமைச்சரவையைக் கூட்டி, ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கும் வரை சட்டப் பேரவையில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் தி.மு.க பங்கேற்காது' என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக

பட்ஜெட் தாக்கலுக்குப் பின் இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. கறுப்புச் சட்டை அணிந்து தி.மு.க-வினரும் பங்கேற்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தி.மு.க-வின் ஒத்திவைப்புத் தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். அதையடுத்து, தி.மு.க-வினர் சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். பின்னர், சட்டசபைக்கு வெளியே தி.மு.க-வினர் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தி.மு.க செயல் தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின்னரே அரசாணை வெளியிட வேண்டும். அப்போதுதான் நீதிமன்றத்தால் எதுவும் செய்ய இயலாது. அந்த அரசாணை வலிமை வாய்ந்ததாக இருக்கும். ஆனால் தற்போது, அ.தி.மு.க அரசு தனியாக வெளியிட்ட அரசாணை வெறும் கண்துடைப்பு நாடகம். இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் எளிதாக மறுப்பு வாங்கி மீண்டும் ஆலையைத் திறந்து விடும். தற்போதுகூட அவர்களுக்குச் சாதகமாகவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் வெளியிட்ட  அறிக்கையிலும், அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் இன்று சட்டப் பேரவையில் வெளியிட்ட விவர அறிக்கையிலும் ‘துப்பாக்கிச் சூடு’ என்ற வார்த்தையை எங்கும் முதல்வர் பயன்படுத்தவில்லை. ஆனால், 13 பேர் படுகொலை, கையாலாகாத அரசு என்று நான் சட்டசபையில் பேசிய வார்த்தைகளைச் சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார். 13 பேர் கொல்லப்பட்டார்களா இல்லையா? எத்தனை பேர் இறந்தார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஏன் வெளியிடப்படவில்லை? 

இந்தப் படுகொலையைச் செய்த காவல்துறை அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள்மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, பதவிநீக்கம் செய்ய வேண்டும். அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இது, தி.மு.க மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்ப்பிலும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அமைச்சரவையைக் கூட்டி அரசாணை வெளியிடும் வரை சட்டப் பேரவையில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் தி.மு.க பங்கேற்காது” எனத் தெரிவித்தார். 

இவரைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “முதல்வர் வாசித்த விவர அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையையே அரசு எங்கும் பயன்படுத்தவில்லை. முதல்வர், உண்மையை அவைக்கு மறைத்துள்ளார். இது, கிரிமினல் குற்றம்” என குற்றம் சாட்டினார்.