வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (29/05/2018)

கடைசி தொடர்பு:14:58 (29/05/2018)

`ஐந்து நாள்... மூன்று நாடுகள்...' - இந்தோனேசியாவுக்குச் சென்றார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, ஐந்து நாள் சுற்றுப்பயணமாக  இன்று இந்தோனேசியாவுக்குச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார். 

மோடி

இந்தோனேசியாவுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது. இந்தியாவில் இருந்து இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்குச் செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது, இருநாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம்குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அங்கு, மூன்று நாள் பயணம் மேற்கொள்ளும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இந்தோனேசியா பயணம் முடித்தபின், மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்கிறார். அங்கு, புதிதாகப் பதவியேற்றுள்ள மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவை சந்திக்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்பின், வரும் வியாழக்கிழமை சிங்கப்பூர் செல்கிறார். அங்கு, 22 ஆசிய பசிபிக் நாடுகள் கலந்துகொள்ளும் `ஷான்கிரி-லா' மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதமர், மோடி ஆவார். இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உயரதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலையையும் திறந்துவைக்கிறார்.