சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..! - சென்னை மண்டலம் 97.37% தேர்ச்சி

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சென்னை மண்டலம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது.

சி பி எஸ் இ

மத்திய இடைநிலைக் கல்வி (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. நாடு முழுவதும் நடந்த இத்தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் எழுதினர். தேர்வு நடந்துகொண்டிருக்கும்போதே, 10-ம் வகுப்பு கணக்கு தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் லீக்கானது. பிறகு, அந்தத் தேர்வு ரத்துசெய்யப்பட்டு, வினாத்தாளை லீக் செய்த தனியார் கோச்சிங் சென்டர் உரிமையாளர், ஆசிரியர்கள் உட்பட சிலரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் எழுந்த எதிர்ப்பின் காரணமாக, தேர்வு ரத்து வாபஸ் வாங்கப்பட்டது. இதனால், மாணவர்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால்,  இன்று மதியமே ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி,  cbseresults.nic.in, results.gov.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 86.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். மாணவர்கள் 85.32 சதவிகதமும், மாணவிகள் 88.67 சதவிகிதமும் பெற்றுள்ளனர். இதில், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 97.37 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  இதன்மூலம், தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவிகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக, இரண்டு நாள்களுக்கு முன் வெளியான 12-ம் வகுப்பு தேர்விலும் சென்னை மண்டலம் இரண்டாவது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!