வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (29/05/2018)

கடைசி தொடர்பு:19:45 (29/05/2018)

`விளக்கம் கேட்டேன்; டாஸ்மாக் அமைச்சர் பாய்கிறார்' - பேரவையில் அதிர்ந்த தினகரன்

தமிழக சட்டசபைக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரனுக்கும் அமைச்சர் தங்கமணிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதால் அவையில் சிறிது சலசலப்பு நிலவியது.

டிடிவி

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் அதன் மீதான விவாதம் மட்டுமே சட்டப் பேரவையில் நடைபெற்றது. இதையடுத்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காகவும் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காகவும் இன்று முதல் ஜூலை 9-ம் தேதி வரை சட்டசபைக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த எம்.எல்.ஏ மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பிறகு, சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விவர அறிக்கையை முதல்வர் வாசித்தார். 

அப்போது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் அ.தி.மு.க அமைச்சர் தங்கமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘தூத்துக்குடியில் நடைபெற்று வந்த போராட்டத்தின்போதே ஆலையை மூட அரசாணையைப் பிறப்பித்திருக்கலாமே, ஏன் 13 உயிர்கள் பறிபோன பின்பு அரசாணை பிறப்பிக்கப்பட்டது? நான் தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்துப் பேசினேன். அவர்கள் மிகவும் கொதிப்புடன் உள்ளார்கள். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரசு மூடி மறைக்கிறது’ எனத் தினகரன் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.

தினகரன் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, அ.தி.மு.க அரசு மிகவும் சிறப்பாகவே செயல்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற உடனேயே தூத்துக்குடியைச் சேர்ந்த அமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசினார். பின்னர், துணை முதல்வரும் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசினார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகக் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்கவும் அரசு முடிவுசெய்துள்ளது. பொய் புகார்களைக் கூறி அரசுக்கு அவப்பெயர் விளைவிக்க வேண்டும் என்ற உங்களின் பகல் கனவு பலிக்காது'' எனச் சாடினார்.

இதன் பின்னர், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் , “முதல்வர் வாசித்த விவர அறிக்கையில் சில அரசியல் கட்சிகளின் சதியால்தான் போராட்டம் கலவரமாக மாறியது எனக் கூறினார். அது எந்தெந்த கட்சிகள் என நான் விளக்கம் கேட்டேன். அதற்கு டாஸ்மாக் அமைச்சர் தங்கமணி என்மீது பாய்கிறார். விஷமிகள், சமூக விரோதிகள் என்று மட்டுமே முதல்வர் கூறுகிறாரே தவிர, யார் என்று விளக்கம் கேட்டால் மட்டும் அமைச்சர் நிதானம் இல்லாமல் பேசுகிறார்” எனக் குற்றம்சாட்டினார்.