வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (29/05/2018)

கடைசி தொடர்பு:16:20 (29/05/2018)

திருமணம் முடிந்த மூன்றாவது நாள் கணவர் ஆணவக்கொலை; தமிழகத்தில் இருவர் கைது!

கேரளாவில் நடந்த கௌரவ் கொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்த மூன்றாவது நாள் கணவர் ஆணவக்கொலை; தமிழகத்தில் இருவர் கைது!

கேரளாவில் நடந்த ஆவணவக் கொலை மாநிலத்தையே அதிர்ச்சியில் உறையை வைத்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பைச் சேர்ந்த இருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கேரளாவில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கெவின் ஜோசப்

கோட்டயத்தைச் சேர்ந்த கெவின் பி.ஜோசப் (வயது 23), தென்மலையைச் சேர்ந்த நீனு என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வெள்ளிக்கிழமை கோட்டயம் சார் பதிவாளர் அலுவலகத்தின் நண்பர்கள் உதவியுடன் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. ஏழ்மை நிலையில் இருந்த கெவின் ஜோசப்பை நீனு திருமணம் செய்துகொண்டது அவரின்  குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நண்பர் அனீஸ் என்பவருடன் கெவின் பேசிக்கொண்டிருந்தபோது, நீனுவின் சகோதரர் சானு சாக்கோ ஒரு கும்பலுடன் வந்து இருவரையும் இனோவா காரில் ஏற்றியுள்ளார்.

பின்னர், அனீஷை தாக்கி காரிலிருந்து ரோட்டில் வீசிய கும்பல், கெவின் ஜோசப்பை மட்டும் கடத்திச் சென்றுள்ளது. திங்கள்கிழமை காலை தென்மலையில் உள்ள ஆற்று ஓரமாக கெவின் ஜோசப்பின் சடலம் மீட்கப்பட்டது. கெவின் ஜோசப்பின் முகம் சிதைந்துபோய் காணப்பட்டது. திருமணம் முடித்த மூன்றாவது நாளே மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டது கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கணவர் கடத்தப்பட்டதும்,  நீனு அழுதவாரே  கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர். கெவின் ஜோசப் கொலை செய்யப்பட்டதையடுத்து கோட்டயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காந்திநகர் போலீஸ் நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டனர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க தவறிய காந்திநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிபு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கொச்சியிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். `இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாது' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

ஆணவக்  கொலை செய்யப்பட்ட கெவின் மனைவி

இந்தக் கொலையில் தொடர்புடையதாக இளைஞர் ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நியாஸ், ரியாஸ் ஆகியோர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இஷான் என்பவரையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். உடல்கூறு ஆய்வுக்குப் பிறகு, கெவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கெவின் உடலைப் பார்த்து நீனு கதறி அழுதது சுற்றியிருந்தவர்களுக்கு வேதனையை அளித்தது. 

ஆணவக்கொலை வழக்கில் நீனுவின் தந்தை சாக்கோ, சகோதரர் சானு உள்ளிட்ட 14 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளவர்களைப் போலீஸ் படை தேடிவருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க