1966-ல் 5 வகுப்புகள்... இன்று 15 துறைகள்; 5,052 மாணவர்கள்... அசுர வளர்ச்சியில் அரசுக் கலைக்கல்லூரி

``தான்தோன்றிமலை அரசுக் கலைக்கல்லூரி மேன்மேலும் வளர்ச்சி பெற்று பல்கலைக்கழக நிலை உயர வேண்டும்" எனப் பொன்விழா ஆண்டு நினைவுத்தூண் திறப்பு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியின் பொன்விழா ஆண்டு நினைவுத்தூண் திறப்புவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று நினைவுத்தூணை திறந்து வைத்து பேசுகையில், "1966-ம் ஆண்டு 5 புதுமுக வகுப்புகளுடன் தொடங்கப்பட்டு தற்போது 15 துறைகளில் 17 இளநிலை பாடப்பிரிவுகள், 15 முதுநிலை பாடப்பிரிவுகள் மற்றும் 11 ஆராய்ச்சி பாடப்பிரிவுகளுடன் 5,052 மாணவ, மாணவிகள். நாக் குழுவால் மூன்று நட்சத்திர அந்தஸ்துடன் யு தரச்சான்றிதழ் பெற்று ஒரு பல்கலைக்கழகத்துக்கு நிகராக வளர்ந்துள்ளது. இக்கல்லூரியில் பயின்ற பல மாணவ, மாணவிகள் பல்வேறு வேலைவாய்ப்புகள் பெற்று வளமான வாழ்வைப் பெற்றுள்ளனர். பல ஏழை மாணவ, மாணவிகளின் வாழ்வில் வளம்பெறச் செய்த இந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு என்ன தேவை என்றாலும் மாவட்ட நிர்வாகத்தோடு
இணைந்து செய்து தர தயாராக உள்ளோம்.

உள்சாலைகள், வகுப்பறைக் கட்டடங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி பேராசிரியர்கள் நல்ல கருத்துகளையும் புதுமைகளையும் மாணவ, மாணவிகளுக்கு சொல்லித் தர வேண்டும். பல்கலைக்கழக மானிய குழுவால்
நடத்தப்படும் தேர்வுகளை மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளத் தக்க வகையிலான பாடத்திட்டங்களைப் பயிற்றுவிக்க வேண்டும். மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களது கருத்துகளை உள்வாங்கி ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டு தாங்களும் வளர்ந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி, இன்னும் 100 ஆண்டுகள் வளர்ச்சியை நோக்கி வளர வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!