`ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அதிகாரம் இருந்தால் 13 உயிர்களைப் பலிகொண்டது ஏன்?' - சீமான் கேள்வி

`ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணையிடும் அதிகாரத்தைத் தமிழக அரசுக்கு இருந்திருக்குமானால், 13 அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொண்டது எதற்காக' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நெல்லையில் கேள்வி எழுப்பினார்.

சீமான்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர்களான வியனரசு, சிவகுமார் உள்ளிட்ட 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

பின்னர் பேசிய சீமான், "ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு வெளியிட்டுள்ள ஆணை வெறும் கண் துடைப்பானது. இதற்கு முன்பும் இதேபோல பலமுறை ஆலையை மூட ஆணை பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் ஆலை தரப்பினர் முறையிட்டதால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதனால் ஆலையை மூடுவது தொடர்பாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டியது அவசியம்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருந்திருக்குமானால், எதற்காக 13 அப்பாவிகளின் உயிர்கள் கொல்லப்படும் வரையிலும் அரசு பார்த்துக்கொண்டிருந்தது? அதனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு முழுக்காரணமே தமிழக அரசு தான். துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவை துணை வட்டாட்சியர்கள் வழங்கியதாகச் சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரக்காரர்கள் பங்கேற்றதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வதில் உண்மையில்லை. கலவரம் செய்பவர்கள் குடும்பத்துடனும் குழந்தைகளை அழைத்துக்கொண்டும் போராட்டத்துக்கு வந்திருப்பார்களா? தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருமே பொன்.ராதாகிருஷ்ணனுக்கு உறவினர்கள்தானே? அப்படி இருக்கையில் போராடியவர்களைக் கலவரக்காரர்கள் என்று சொன்னால், பொன்.ராதாகிருஷ்ணன்தான் அவர்களின் தலைவராக இருப்பார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தூத்துக்குடி மக்களின் விருப்பம். அதனால், ஏற்ற வகையில் உரிய சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று அவர் பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!