வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (29/05/2018)

கடைசி தொடர்பு:17:20 (29/05/2018)

`கொந்தளிப்பான கடல்; மணல் புயல்!’ - தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தனுஷ்கோடி கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தனுஷ்கோடி கடல் பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பினால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளன. இதனால் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதேபோல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த பகுதியால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இம்மாதம் 31-ம் தேதி வரை நீடிப்பதால் கடலோரப் பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தனுஷ்கோடி கடலில் ஆர்பரிக்கும் அலைகள்


இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் பகுதிகளில் உள்ள கடற்பகுதிகளில் ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தை மூழ்கடிக்கும் வேகத்தில் சுமார் 20 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் செல்ல காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி அரிச்சமுனை கடல் பகுதிக்குச் சென்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் கம்பிப்பாடு கடற்கரை பகுதி வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் செல்ல போலீஸார் அனுமதிக்கின்றனர். மேலும், காற்றின் வேகத்தால் கரையோர மணல்கள் புழுதி புயலாக மாறி சாலையில் செல்வோர்மீது வீசுகிறது. மேலும், சாலையில் குவிந்துவரும் மணல் திட்டுக்களால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.