வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (30/05/2018)

கடைசி தொடர்பு:09:38 (30/05/2018)

``காவல் துறை மூலம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சி!" - ஓ.என்.ஜி.சி மீது பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு!

ஓ.என்.ஜி.சி தமிழக காவல் துறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்வதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

'காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துப் பாலைவனமாக்க மத்திய அரசு முயல்கிறது. இதுபோன்ற பேரழிவுத் திட்டங்களுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது' என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

பி.ஆர்.பாண்டியன்

தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டம், அதன் மாநிலத் தலைவர்  புண்ணியமூர்த்தி தலைமையில் திருவாரூரில் நடைபெற்றது. இதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்னைகள் குறித்துப் பேசினார்.

``காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துப் பாலைவனமாக்க மத்திய அரசு முயல்கிறது. பேரழிவுத் திட்டங்களுக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது. ஓ.என்.ஜி.சி தமிழக காவல் துறையைப் பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க முனைகிறது. அது வெற்றி பெறாது. விவசாயிகள், தங்கள் விளை நிலங்களைப் பேரழிவுத் திட்டங்களுக்குக் கொடுக்கக் கூடாது.

ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ், ஜெம் நிறுவனங்களைக் கிராமங்களில் காலடி பதிக்க அனுமதிக்காமல் விரட்டியடிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி பேரழிவுத் திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கிடையே ஒன்றுபட்ட கருத்து உருவாகவில்லை. காவிரிப் போராட்டத்தில்  ஒன்றுபட்டது போல ஓஎன்சிக்கு எதிரான கருத்தை உருவாக்குவதற்கு  முயற்சி மேற்கொள்வோம். ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராட முன்வராத கட்சிகளைத் தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துவோம்.

கிராமங்கள்தோறும் நிலம் கொடா இயக்கம் துவங்க வேண்டும். காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துப் பாதுகாக்க வலியுறுத்தி, வரும் ஜூன்  12 -ம் தேதி  மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை  திருவாரூரில்  நடத்த இருக்கிறோம்.  அதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். அந்தப் போராட்டத்துக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்க இருக்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க