டாஸ்மாக் கடையைத் திறக்கும் முன்பே அடித்துநொறுக்கிய பெண்கள்! | TASMAC Shop was cleared by women

வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (30/05/2018)

கடைசி தொடர்பு:09:27 (30/05/2018)

டாஸ்மாக் கடையைத் திறக்கும் முன்பே அடித்துநொறுக்கிய பெண்கள்!

TASMAC Shop

 தி.மு.க தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், புதிதாகத் திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடையை அடித்துநொறுக்கி கூரையைப் பிரித்து எடுத்துச்சென்றார்கள் பெண்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக்

 
  

திருக்குவளை பிரதான சாலையில் ஏற்கெனவே டாஸ்மாக் கடை இயங்கிவந்தது.  இந்தக் கடை,  உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது. தற்போது, பேருந்து நிலையம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருந்தது. கட்டடம் கட்டி, மேற்கூரை போடப்பட்டு வெகுவிரைவில் திறக்கப்பட இருந்தது.  இந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் கல்வி நிறுவனங்களும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த வீடான நினைவகமும் இருக்கிறது. இதன் நடுவே டாஸ்மாக் கடை அமைத்தால், அது பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாகும் என்பதைக் கருத்தில்கொண்ட பெண்கள், நேற்று மதியம் ஆக்ரோஷமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாகக் கட்டப்பட்ட டாஸ்மாக் கடையை அடித்துநொறுக்கியதோடு, அதன் மேற்கூரையைப் பிரித்து எடுத்துச்சென்றனர்.  அந்த இடமே ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது. அங்கிருந்தவர்களும் இதைத் தடுக்க முடியாமல் வேடிக்கைபார்த்தபடி இருந்தனர்.  

ஆக, புயலாக வந்த பெண்கள், புதிதாகத் திறக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு முற்றுப்புள்ளி வைத்துச் சென்றுள்ளது, இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.