மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த என்எல்சி பேச்சு வார்த்தையில் உடன்பாடு!

ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு மாதத்தில் 26 நாட்கள் பணி வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் முன்பு வழங்கிய பணியே வழங்க வேண்டும் எனக்கூறி காலை 6 மணி பணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்

என்எல்சி நிறுவன முதல் சுரங்க விரிவாக்கத்திற்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கல்லுக்குழி, வாணாதிராயபுரம், காட்டுக்கொல்லை உட்பட்ட சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களின்  வீடு, நிலம் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த 41 பேர், முதல் சுரங்க விரிவாக்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கடந்த 16 ஆண்டுகளாகப்  பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன், இவர்களை முதல் சுரங்க  விரிவாக்கத்திலிருந்து பணி மாறுதல் செய்துள்ளனர். பின்னர், அதிலிருந்து சிலர் இரண்டாவது சுரங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தொழிலாளர்கள், கடந்த 20 ஆண்டுகளாக ஒரே பணியைச் செய்துவந்தனர். அதனால், இவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும்போது, தங்களால் செயல்பட முடியவில்லை. மேலும், இவர்களுக்கு மாதம் 26 நாள்கள் வேலை வழங்குவதற்குப்  பதில் 15 நாள்கள் மட்டுமே பணி வழங்கியுள்ளனர். இந்தத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 நாள்களுக்குப் பணி வழங்க வேண்டும். மேலும், முன்பு பணியாற்றிய முதல் சுரங்க விரிவாக்கத்திலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனக் கூறி, கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு, முன்பு பணிபுரிந்த இடத்திலேயே மீண்டும் பணி வழங்க வேண்டும்' எனக்கூறி ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா எனப் பல கட்டப் போராட்டங்களை நடத்திவந்தனர்.

நெய்வேலி  என்எல்சி பேச்சுவார்த்தை

இந்நிலையில், நேற்று  காலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 21 பேர்  முதல் சுரங்க விரிவாக்கம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல்  செய்தனர். அப்போது அவர்களில் சிலர் திடீரென மறைத்துவைத்திருந்த விஷ பாட்டிலைத் திறந்து குடித்தனர். விஷம் அருந்திய 7 தொழிலாளர்கள்  ஆம்புலன்ஸ் மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

பின்னர், அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இன்று காலையில், முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றும் 700 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு மாதத்தில் 26 நாள்களுக்குப் பணி வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட 41  தொழிலாளர்களுக்கும் முன்பு வழங்கிய பணியே வழங்க வேண்டும் எனக்கூறி, காலை 6 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த பேச்சுவார்த்தை, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தண்டபாணி தலைமையில் நடந்தது. இதில் என்எல்சி அதிகாரிகள், ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க சிறப்புத் தலைவர் சேகர், அந்தோணி, சிவா மற்றும் நெய்வேலி டிஎஸ்பி., வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான வேலை நாள்கள் குறைக்கப்பட மாட்டாது. 41 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் பணி மாறுதல் ரத்து செய்யப்படும் என உறுதியளித்தன் பேரில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என தொழிற் சங்க நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!