`அரசின் திட்டங்களைத் தெரிந்துகொள்ள பிரத்யேக வலைதளம்' - கரூரில் தொடக்கம்!

அரசுத் துறைகளின் திட்டங்களை அறிவதற்காக, கரூர் மாவட்டத்தில் வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசுத் துறைகளின் திட்டங்களை அறிந்துகொண்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்பெறுவதற்காக மாவட்ட தகவலியல் மையம் சார்பில், புதிய வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதை, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்,  ``இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுத் துறைகள்குறித்த பொதுமக்களின் பயன்பாட்டுக்கான நவீன தகவல் தொழில்நுட்பத்துடன்கூடிய வலைதளத்தை தமிழகத்தில் முதல்முறையாக சேலம் மாவட்டத்திலும், ஆந்திர மாநிலத்தில் ஈஸ்ட் கோதாவரியிலும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத், கடந்த 8-ம் தேதி தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் www.karur.nic.in என்ற முகவரியிலான மாவட்ட வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளலாம். 

இந்த வலைதளம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் வலைதள விதிமுறைகளை 100 சதவிகிதம் முழுமையாகப் பின்பற்றி, புதிய தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு இணையதளப் பாதுகாப்பு அம்சங்களுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கரூர் மாவட்டம்குறித்த அனைத்து பொதுத்தகவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் இடத்தில் இருந்தபடியே அறிந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான அரசுத்துறையின் சேவைகளையும், விவரங்களையும் பெற வழிவகைசெய்யப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில், தினமும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்படும் மாவட்ட செய்தி வெளியீடுகள் மற்றும் புகைப்படங்களைக் காண முடியும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!