ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியீடு..! - மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி | tamilnadu plus 1 result has released

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (30/05/2018)

கடைசி தொடர்பு:10:53 (30/05/2018)

ப்ளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியீடு..! - மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி

ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 91.3 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்வு முடிவுகள்

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் அத்துறையின் செயலாளராக இருந்த உதயசந்திரனும் இணைந்து, கடந்த ஆண்டு, பள்ளிக் கல்வித்துறையில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தனர். அதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக 11- ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. முந்தைய ஆண்டு வரை 1,200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு, நடப்பு கல்வியாண்டில் 600 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. மேலும், தேர்வு நேரம் மூன்று மணியில் இருந்து இரண்டரை மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. 

இந்தத் தேர்வுகள், கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடந்தன. 8,63,668 பேர், இந்தத் தேர்வை எழுதினர். 2,795 மையங்களில் தேர்வுகள் நடந்தன. இத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 91.3 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளே 7.2 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சிபெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் 94.6. மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 87.4. 

மேலும், 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,054 மற்றும் 2,724 அரசுப் பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சிபெற்றுள்ளன. ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வில்  97 சதவிகிதத் தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடத்திலும், திருப்பூர் 96.4 சதவிகிதத் தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்திலும் கோவை 96.2 சதவிகிதத் தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 

தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.inhttp://www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.