குஜராத்தில் ராஜராஜ சோழன் சிலை மீட்பு! - 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வருகிறது

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்புள்ள ராஜராஜ சோழன், உலகமாதேவி சிலைகள் குஜராத்தில் மீட்கப்பட்டுள்ளன.

ராஜராஜ சோழன் சிலை

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள்,  சமீபத்தில் கண்டறியப்பட்டன. கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாக சென்னைக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கௌதம் சாராபாய் என்பவருக்கு கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்கப்பட்டது தெரியவந்தது. இதை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து விசாரணைசெய்துவந்தனர். 

அதன் அடிப்படையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் ஃபவுண்டேஷன் - காலிகோ அருங்காட்சியகத்தில், தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இரு சிலைகளும் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்து, சிலைகளை அருங்காட்சியக அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.  அதில், இரண்டரை அடி உயரமுள்ள ராஜராஜன் சிலையின் மதிப்பு 100 கோடி ரூபாயாகும். இரண்டடிக்கும் குறைவாக உள்ள உலகமாதேவி சிலையின் மதிப்பு 50 கோடி ரூபாயாகும். கைப்பற்றப்பட்ட சிலைகளுடன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரயில்மூலம் நாளை (31-ம் தேதி) சென்னை வர இருக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!