வெளியிடப்பட்ட நேரம்: 11:23 (30/05/2018)

கடைசி தொடர்பு:13:21 (30/05/2018)

சமூக விரோதிகளே வன்முறைக்கு காரணம்! தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி #Liveupdates

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.

ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர்  காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், கமல்ஹாசன் ஆகியோர் சந்தித்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று தூத்துக்குடி வந்துள்ள ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திக்கிறார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறுகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 10.40 மணிக்கு தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் சிக்கிக்கொண்ட ரஜினியைப் பாதுகாப்புடன் அழைத்துவந்தனர்.

பின்னர் காரில் ஏறிய ரஜினி, ரசிகர்களைப் பார்த்து கைகளைக் காட்டி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர், 100 கார்கள் புடைசூழ அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டார். குறிப்பிட்ட தூரம் வந்தவுடன், 10 கார்களை மட்டுமே காவல்துறையினர் அனுமதித்தனர். போக்குவரத்தைக் காவல்துறையினர் சீர்படுத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள்களை வழங்க உள்ளார். 11.25 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த ரஜினியைத் தூத்துக்குடி ஏ.டி.எஸ்.பி குமாரவேலு பாதுகாப்புடன்  உள்ளே அழைத்துச் சென்றார். சிகிச்சை பெற்று வரும் 48 பேர்களிடமும் ரஜினிகாந்த் நலம் விசாரித்துவருகிறார்.

பாதிக்கப்பட்டவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்ட ரஜினி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அவர்கள் புன்சிரிப்புடன் காணப்பட்டனர். அவர்களுக்கு ரஜினி நிதியுதவி வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ரஜினி, ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என கூறினார்.

ஆலையை திறக்க ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் நீதிமன்றம் சென்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது என்று கூறிய ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடக்கி வைத்திருந்தார். சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே" என்று குற்றம்சாட்டினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க