மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா செல்லலாம்! உயர் நீதிமன்றம் அனுமதி | High court gives permission for Nithyanandha to access madurai adinam mutt

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (30/05/2018)

கடைசி தொடர்பு:13:25 (30/05/2018)

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா செல்லலாம்! உயர் நீதிமன்றம் அனுமதி

நித்தியானந்தா

மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெகதலப்பிரதாபன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ''மதுரை ஆதீன மடம் 1,500 ஆண்டுகள் பழைமையானது. இதன் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார். கடந்த 2012-ல் பிடுதியில் தியான பீடம் நடத்திவரும் ராஜசேகர் என்ற நித்தியானந்தா, ஆதீன மடத்துக்குள் நுழைய முற்பட்டார். சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நித்தியானந்தா தன்னை ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதியாக முறைகேடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். எனவே, ஆதீன மடத்தைப் பாதுகாக்கவும் மடத்துக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு நிரந்தரத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு,  தனி நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த  நீதிபதி, மதுரை ஆதீன மடத்துக்குள் எந்த வகையிலும் நித்தியானந்தா செல்வதற்குத் தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருவண்ணாமலை நித்தியானந்த பீடத்தைச் சேர்ந்த நித்யானந்தா என்ற ராஜசேகர் என்பவர் உயர் நீதிமன்றம் 
மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அதில், "நான் பக்தராக ஆதீனம் மடத்துக்குள் நுழைய தடைவிதிக்கக் கூடாது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைகாலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர்கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை, மதுரை ஆதீனம் ஆகியோர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.