வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (30/05/2018)

கடைசி தொடர்பு:14:25 (30/05/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அனைத்திந்திய வழக்கறிஞர் யூனியன் பொதுச் செயலர் முத்து அமுதநாதன் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் அப்பகுதி மக்கள் பலர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் போராட்டம் நடைபெற்றது. மே 22-ம் தேதி பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஊர்வலத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் 50-க்கும் அதிகமானோர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் தூத்துக்குடி பகுதியில் இணையதள சேவை, போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி நகரமே தீவுபோல் காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. போராட்டத்தில் நடத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் முறையான அனுமதி பெறாமல் நடத்துள்ளது. எனவே, தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறை டி.ஜி.பி, டி.ஐ.ஜி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி, சிப்காட் இன்ஸ்பெக்டர் ஆகியோர்மீது இந்திய தண்டனை சட்டம் 302-ன் படி கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்'' என மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல், தூத்துக்குடியைச் சேர்ந்த கந்தகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த இரண்டு மனுக்கள் நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.