ராஜராஜ சோழன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? பொன்.மாணிக்கவேல் டீம் ஆச்சர்யத் தகவல்

ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டது எப்படி என்பது குறித்து ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் டீம் ஆச்சர்யத் தகவலை வெளியிட்டுள்ளது.

தஞ்சைப் பெரியகோயிலில் வைக்கப்பட்டிருந்த பலநூறு ஆண்டுகள் பழைமையான மாமன்னன் ராஜராஜ சோழன் - உலகமாதேவியின் உலோகச் சிலைகள், 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனது. இந்தச் சிலைகள், குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பதாக ஒரு தகவல் உலா வந்தது. சரித்திரப் புகழ்மிக்க இந்தச் சிலைகளை மீட்டுக் கொண்டுவந்து, மீண்டும் பெரியகோயிலில் வைக்க வேண்டும் என்ற தஞ்சை மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இருந்தது. இந்நிலையில்தான் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தலைமையிலான டீம், இந்தச் சிலைகளை மீட்டு சரித்திரச் சாதனை நிகழ்த்தியுள்ளது.

ராஜராஜ சோழன் சிலை

ராஜராஜ சோழன் சிலை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை மதிப்புகொண்டது. இதன் உயரம், இரண்டரை அடி. உலகமாதேவி சிலை 50 கோடி ரூபாய்க்கும் மேல் விலை மதிப்புகொண்டது என்கிறார்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார். மிகப்பெரிய பேரரசைஆட்சி செய்த தமிழ்மன்னன் ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள் திருடப்பட்டு, குஜராத் தனியார் அருங்கா ட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம் என்றும், இந்தச் சிலைகளை மீட்டுக் கொண்டுவந்து பெரியகோயிலில் வைக்க வேண்டும் என்றும் தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் நீண்டகாலமாக கோரிக்கை வைத்துவந்தார்கள். பெரியகோயில், ஆயிரமாவது ஆண்டின்போது, இதற்கான முயற்சியில் அப்போதைய தி.மு.க அரசு இறங்கியது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில்தான், இந்தச் சிலைகள் காணாமல்போனது தொடர்பாக ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தலைமையிலான டீம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில்தான், மே 28-ம் தேதி ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜாராமன், அசோக் நடராஜன், ஆய்வாளர்கள் ரவி, விநாயகமூர்த்தி, சுரேஷ்குமார், சிபின்ராஜமோகன், காவலர்கள் செழியன், சாமியப்பன் ஆகியோர் கொண்ட டீம் குஜராத் கௌதம் சாராபாய் காலிகோ மீயூசியத்தில் புலன் விசாரணை மேற்கொண்டது. அங்குள்ள சிலைகள்,  தஞ்சைப் பெரியகோயிலிலிருந்து திருடப்பட்டவைதான் என்பதை ஏராளமான ஆதாரங்களுடம் உறுதிசெய்தது.

இதுகுறித்து இந்த டீமில் உள்ளவர்களிடம் பேசியபோது, ‘’இது மிகவும் சவாலான வழக்காகவே இருந்தது. இந்தச் சிலைகளை தஞ்சைப் பெரியகோயிலில் நேரில் பார்த்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்தோம். அவர்கள் அனைவருமே வயது முதிர்ந்தவர்கள். அவர்கள் சொன்ன தகவல்கள் எங்களுக்கு பல வகைகளிலும் உதவியாக இருந்ததோடு, சாட்சியங்களாகவும் பயன்பட்டன. 60 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் இருந்த நிர்வாகிகளால் திருடப்பட்டு, தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரியார் மூலமாக சாராபாய் அருங்காட்சியகத்திடம் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட இந்தச் சிலைகள், ரயில்மூலம் மே 31-ம் தேதி சென்னை கொண்டுவரப்படும்” என்று தெரிவித்தார்கள்.

மாமன்னன் ராஜராஜன் - உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டு மீண்டும் பெரியக்கோயிலில் வைக்கப்படுவதென்பது, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சரித்திரச் சாதனையாகவே போற்றப்படுகிறது.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!