`மலையரசிக்கு உடல்நிலை சரியில்லை, சுற்றுலாப் பயணிகள் இங்கு வரவேண்டாம்’ - எச்சரிக்கும் சிம்லா மக்கள்

இந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிம்லாவுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என அந்நகர மக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. 

சிம்லா

இந்தியாவில் உள்ள  முக்கியமான மலை வாசஸ்தலங்களில் ஒன்றாக இருப்பது இமாசலபிரதேசத்தில் உள்ள சிம்லா. இது இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் ,இங்கு இருக்கும் மலைகள் மற்றும் காலநிலையின் அழகை ரசிப்பதற்காக ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கின்றனர். இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் பல பயணிகள் சிம்லா வருவது வழக்கம். 

கடந்த சில வருடங்களாக சிம்லாவில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதிலும் இந்த வருடம் நிகழும் பருவநிலை மாற்றம் மற்றும் குறைவான மழையால் முற்றிலும் தண்ணீரின்றி அந்த மக்கள் தவித்து வருகின்றனர்.  இதுகுறித்து கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் சில கருத்துகள் வைரலாகப் பரவி வருகிறது. அது, ‘கோடைக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க சிம்லா செல்ல வேண்டும் என நினைக்கும் மக்கள் தயவுசெய்து இங்கு வர வேண்டாம், காரணம் இங்கு தண்ணீர் அளவு முற்றிலும் குறைந்துள்ளது. இங்கு வாழும் மக்களே தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். குறைவான மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சிறிது காலத்துக்கு சிம்லாவைச் சுற்றுலாப் பயணிகள் தொந்தரவு செய்யாமல் இருந்தால் நல்லது.’ மேலும்,‘மலையரசிக்கு தண்ணீரின்றி உடல் நிலை சரியில்லை. எனவே, சுற்றுலாப் பயணிகள் சிம்லாவை விட்டு சிறிது காலத்துக்குத் தள்ளியிருப்பது சிறந்தது.’ போன்ற பதிவுகள் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.  

சிம்லா செல்ல இருந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் தங்களின் பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும்  மறு பதிவும் செய்துவருகின்றனர். சிம்லாவில் வாழும் மக்கள் தங்களின் கைகளில் குடங்களுடன் தண்ணீர் லாரியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் புகைப்படங்களும், தண்ணீர் லாரி அருகில் மிக நீண்ட வரிசையில் குடங்களுடன் நிற்கும் புகைப்படங்களும் அதிகம் வைரலாகி வருகிறது. 

இதையடுத்து, குடிநீர் தட்டுப்பாடு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து இமாசல பிரதேச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதில் 3 நாள்களுக்கு ஒருமுறை சிம்லாவின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!