வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (30/05/2018)

கடைசி தொடர்பு:17:00 (30/05/2018)

ஆராய்ச்சி என்ற பெயரில் கொல்லப்பட்ட 120 கர்ப்பமுற்ற திமிங்கிலங்கள் - புள்ளி விவரத்தில் அதிர்ச்சி

ஜப்பானில் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த வருடம் மட்டும் இதுவரை 120 கர்ப்பமுற்ற திமிங்கிலங்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான புள்ளி விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமிங்கிலங்கள்

அண்டார்டிக் கடல் சுற்றுச்சூழல் இயக்கவியல் குறித்து ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு  டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து 115 நாள்களுக்கு ஜப்பானின் சிடேசன் ஆராய்ச்சி மையத்திலிருந்து நான்கு ஆய்வுக் கப்பல்கள் ஆராய்ச்சியில் இறக்கப்பட்டன. திமிங்கிலங்களில் உடலில் உள்ள உயிரியல் மாதிரிகளை வகைப்படுத்த அவற்றை வேட்டையாடி இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். ஆனால், தற்போது இந்த ஆராய்ச்சி குறித்து ஒரு நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கடந்த வருடம் மட்டும் சுமார் 333 Minke வகை திமிங்கிலங்களை வேட்டையாடினர். அதில் 181 பெண் திமிங்கிலங்கள், 53 முதிர்ச்சி அடையாத திமிங்கிலங்கள். 128 முதிர்ச்சியடைந்த திமிங்கிலங்கள், அதிலும் 122  கருவுற்ற திமிங்கிலங்களை வேட்டையாடியுள்ளனர்.

கொல்லப்பட்ட அனைத்து திமிங்கிலங்களின் உடலிலும் வெடி பொருள்களைச் செலுத்தி வெடிக்கவைத்துக் கொல்லப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆராய்ச்சி சூரிய உதயம் ஆரம்பிக்கும் 60 விநாடிக்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் 60 விநாடிக்கு முன்பு முடிந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு திமிங்கிலங்கள் மட்டுமே ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்த முடியும். ஆனால், இவர்கள் 333 திமிங்கிலங்களைக் கொன்று ஆராய்ச்சி நடத்தியுள்ளனர் எனப் பல நாடுகளும், ஜப்பானின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், தாங்கள் 333 திமிங்கிலங்களைக் கொன்றதாக ஜப்பானும் ஒப்புக்கொண்டுள்ளது. திமிங்கிலங்கள் கொல்லப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.