வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (30/05/2018)

கடைசி தொடர்பு:16:35 (30/05/2018)

"நைட்டு போலீஸ் வந்ததால லைட்ட அணைச்சுட்டு அழுதுட்டிருந்தோம்!” - தூத்துக்குடி கலவரத்தின் துயரக்கதை

அன்னைக்கு நைட் ஊருக்குள்ள போலீஸ் வந்துருச்சி. வீட்டுக்கு வெளிய இருந்தவங்க எல்லாரையும் அடிச்சிட்டு இருந்தாங்க, துக்கம் விசாரிக்க வந்தவுங்கள அவசரமா அனுப்பிட்டு, லைட்ட அமத்திட்டு வீட்ட பூட்டிட்டு உள்ளயே அழுதுட்டு இருந்தோம்,

ணையவே அணையாமல் இன்னமும் நினைவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தூத்துக்குடி. படுகொலைகள், மக்களின் மீது துப்பாக்கிச் சூடு போன்ற அசம்பாவீதங்கள் எல்லாம் உலகின் ஏதோ ஒரு முனையில் இருக்கும் நாட்டில்தான் நடக்கும் என்று அப்பாவியாய் நம்பிக்கொண்டிருந்த இளம் தலைமுறை, தன் கண் முன்னே 13 உயிர்ப்பலியைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. பலியான உயிர்கள் விட்டுப் போன வெற்றிடங்கள் இன்னமும் வெறுமையாய் இருக்கிறது.

தூத்துக்குடி, மினி சகாயபுரத்தில் இருக்கிறது 17 வயது ஸ்னோலின் வீடு. கூட்டுக் குடும்பமாய் இருக்கிற வீட்டில் ஸ்னோலின் கடைக்குட்டி. வீட்டில் குழந்தைகள் இருந்தும் வைத்த பொருளெல்லாம் வைத்த இடத்திலேயே இருக்கிறது. ஸ்னோலின் இறப்பால் குடும்பத்தார் அழுத தடயங்கள் மறையவே பல காலமெடுக்கும். ஸ்னோலின் அண்ணனின் குழந்தை ஜிபான்சிதான் ஸ்னோலினுக்கு எல்லாமே. காலையில் எழுவதிலிருந்து இரவு தூங்குவது வரை கடந்த ஆறு மாதமாக ஜீபான்ஷிக்கு எல்லாமே ஸ்நோலின்தான். பன்னிரண்டாவது முடித்திருக்கும் ஸ்நோலின் நர்ஸிங், தையல்பயிற்சி எனக் கூடவே சில விஷயங்களையும் கற்றிருந்தார். பக்கத்திலிருந்த மாதா கோவிலில் குழந்தைகளுக்கு மறைக்கல்வி வகுப்புகளும் எடுத்திருக்கிறார். குழந்தைகள் சூழ் உலகில் இருந்தவர் ஸ்னோலின்.

மே மாதம் ஐந்தாம் தேதி VVD சிக்னல் அருகில் நடந்த போராட்டம்தான் ஸ்னோலினின் முதல் போராட்டம். அன்றிலிருந்து நடக்கிற எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கிறார். கூடவே தன்னுடைய அம்மா வனிதா, அண்ணனின் குழந்தைகள் என எல்லோரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய 22-ம் தேதி காலை போராட்டத்துக்குக் குடும்பத்திலுள்ள எல்லோருமே கிளம்பியிருக்கிறார்கள். 

தூத்துக்குடி ஸ்னோலின் குடும்பம்

"மதினி நீங்க எந்த இடத்துக்கும் வரவே மாட்டேங்குறீங்க, இன்னைக்கு வாங்க மதினி” எனச் சொல்லி மெரில்லடாவையும் போராட்டத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றிருக்கிறார். மெரில்டாவின் ஆறு மாத குழந்தையை ஸ்னோலின் அம்மா வைத்திருக்கிறார். குடும்பம் மொத்தமாக VVD சிக்னல் அருகில் போராட்டக் குழுவோடு இணைந்து கொள்கிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அம்மா குழந்தையோடு கூட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அடுத்து நிகழ்ந்ததை ஸ்னோலின் அண்ணி மெரில்டா விவரிக்கிறார்.

"நா எந்தப் போராட்டத்துக்கும் போனதில்ல, ஸ்னோதான் வாங்க மதினி போவோம்னு கூட்டிட்டு போச்சி. நானும் ஸ்னோவும் ஒண்ணாத்தான் போனோம். என்னோட கைய நல்லா இருக்கமா புடிச்சிருந்தா, விடவேயில்ல. VVD சிக்னல் பக்கத்துல போலீஸ் யாரும் இல்ல.  கலெக்டர் ஆபீஸ் பக்கம் போனதுக்குப் பொறவுதான் எங்கள சுத்தி முத்தி வளச்சிட்டாங்க, எங்களால எந்தப் பக்கமும் போக முடியல. ஸ்னோ என்னோட கைய பிடிச்சிகிட்டேதான் இருந்தா. எந்த எடத்துல அவ கைய விட்டேனு தெரியல. 11:20 இருக்கும் சுடுறாங்கனு எல்லாரும் ஓடுனோம். யார் யார் எங்க போனாங்கனு தெரியல. அத்தை எங்க போனாங்கனு தெரியல. அதுகுள்ள ரெண்டு பேர சுட்டுட்டதா சொன்னாங்க, அதுல ஒரு பொண்ணையும் சுட்டுட்டதா சொன்னதும் எனக்கு பயமாய்டுச்சி. ஸ்னோவ தேட ஆரம்பிச்சிட்டேன். எல்லாரும் என்னை வீட்டுக்குப் போகச் சொன்னாங்க.

அத்தைக்குப் போன் பண்ணி கேட்டதுக்கு 'நா புள்ளைய தூக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். ஸ்னோ வீட்டுக்கு வந்துட்டா. நீ உடனே வீட்டுக்கு வான்னு சொன்னாங்க. சரி ஸ்னோவ பேசச் சொல்லுங்கனு கேட்டேன். ஸ்னோ மாத்திரை போட்டு படுத்துறுக்கா ஒண்ணுமில்ல'னு சொன்னாங்க. அவங்க குரல் ஒடஞ்சிருந்துச்சி, எனக்கு மனசு கேக்கல, அப்பவும் போலீஸ் சுடுறாங்கனு சொல்லி எல்லாரும் ஓடிட்டு இருந்தாங்க. ஓடியே பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன். வீட்ல போண் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லி அழுதாங்க,  ஸ்னோ இல்லாம என்னால வீட்டுக்கு வர முடியாதுனு சொல்லிட்டேன். நாளஞ்சி பேரு ஸ்னோவ சுட்டுட்டதா சொன்னாங்க. ஆனா நா நம்பல. ஆஸ்பத்திரி போனா பாக்கலாம்னு ஆஸ்பத்திரி போனேன், அங்கயும் போலீஸ் யாரையும் விடாம அடிச்சி வெரட்டிட்டே இருந்தாங்க. என்ன பண்றதுனே தெரியாம அங்யே உக்காந்து அழுதேன். வீட்ல எல்லாரும் தேட ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்னோக்கு எதும் ஆகியிருக்காதுனு நம்புனேன். 5 மணிக்கு வீட்டுக்காரரோட ப்ரண்ட் ஒருத்தர் நா அழுறத பாத்து பைக்ல வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டாரு. வீட்ல எல்லாரும் அழுதுட்டு இருந்தாங்க, அப்போதான் ஸ்னோ இறந்ததே எனக்குத் தெரியும். ஸ்னோவ பாக்க அவங்க அண்ணன் ஆஸ்பத்திரிக்குப் போனதுக்கு 'போராட்டதுக்கும் அனுப்பிட்டு இப்ப தங்கச்சிய பாக்க வந்துறுக்கியா'னு போலீஸ் அடிச்சிட்டாங்க. அன்னைக்கு நைட் ஊருக்குள்ள போலீஸ் வந்துருச்சி. வீட்டுக்கு வெளிய இருந்தவங்க எல்லாரையும் அடிச்சிட்டு இருந்தாங்க, துக்கம் விசாரிக்க வந்தவுங்கள அவசரமா அனுப்பிட்டு, லைட்ட அமத்திட்டு வீட்ட பூட்டிட்டு உள்ளயே அழுதுட்டு இருந்தோம், ஸ்னோ வக்கீலுக்குப் படிக்கணும்னு அவ்வளவு ஆசையா இருந்தா, சம்பவம் நடந்ததுல இருந்து இன்னமும் ஸ்னோ முகத்தக் கூட பாக்க முடியல, ஒரே நாள்ல இப்படி மாறும்னு நெனச்சிக் கூடப் பாக்கல" என்கிறார்.

ஸ்னோலின்

மொத்த ஊரும் இறப்புகளால் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆலயப் பெருவிழா கொடி ஏற்றியதோடு நிற்கிறது. எந்தச் சிறப்புக் கொண்டாட்டங்களும் இல்லாமல் திருவிழா நடக்கவிருக்கிறது. ஆறு மாத குழந்தை என்ன நடக்கிறதெனத் தெரியாமல் சிரிக்கிறது. எல்லாம் தெரிந்தும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் ஸ்னோலின் சிரித்துக்கொண்டிருக்கிறார்.

பலியான உயிர்கள் விட்டுப் போன வெற்றிடங்கள் இன்னமும் வெறுமையாய் இருக்கிறது; எதைக் கொண்டு நிரப்புவதெனத் தெரியாமல்!

.