வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (30/05/2018)

கடைசி தொடர்பு:17:40 (30/05/2018)

தனி மனித சுதந்திரத்தைப் பாதிப்பதாக வழக்கு! - சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை

சொல்வதெல்லாம் உண்மைக்கு இடைக்காலத் தடை !

தனி மனித சுதந்திரத்தைப் பாதிப்பதாக உள்ளது என்று கூறி தொடரப்பட்ட வழக்கில் சொல்வதெல்லாம்  உண்மை நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை

கல்யாணசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 2011-ம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30 மணிக்கு `சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்பவர் தொகுத்து வழங்குகிறார். குடும்பத்தில் கணவர், மனைவி இடையே ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவாதங்கள் நடைபெறும். தொகுப்பாளர் லெக்ஷ்மி ராமகிருஷ்ணன் பல்வேறு தனிமனித மற்றும் குடும்ப பிரச்னைகளில் தலையிடுகிறார். பெண்களுக்கு சரியான முறையில் மரியாதை அளிப்பதில்லை. இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிப்பதாக உள்ளது. இந்த நிகழ்ச்சி பொதுநலத்தைப் பாதிப்பதாக உள்ளது. மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சி தகவல் ஒளிப்பரப்பு விதிகளை மீறி செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.