வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (30/05/2018)

கடைசி தொடர்பு:18:20 (30/05/2018)

`பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது' - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன், `தமிழக அரசுக்குப் பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது' என உறுதிபட கூறினார். 

செங்கோட்டையன்

பட்ஜெட் தாக்கலுக்குப்பின் கூடிய தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. முன்னதாக, தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளை மூடிவிடலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், கடந்த 21-ம் தேதியன்று கல்வி அலுவலர்கள் கூடி ஆலோசித்ததாகத் தகவல் வெளியானது. 

இதுதொடர்பாக, சட்டசபையில் இன்று விளக்கம் கொடுத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், `தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வரும் செப்டம்பர் மாதம் வரை கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியளவில் தமிழகத்தைக் கல்வியில் சிறந்த மாநிலமாகக் கொண்டுவர அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகைப் பதிவுக்கு ரூபாய் ஒன்பது கோடி செலவில் பயோமெட்ரிக் முறை திட்டம் நிறைவேற்றப்படும். அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளைத் தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.