நீலகிரியில் சுற்றுலாவை ஊக்கப்படுத்த மீண்டும் நிலக்கரி இன்ஜின் ரயில் சேவை! | To encourage tourism Southern railways to operate special steam engine trains in Nilgris

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (30/05/2018)

கடைசி தொடர்பு:18:40 (30/05/2018)

நீலகிரியில் சுற்றுலாவை ஊக்கப்படுத்த மீண்டும் நிலக்கரி இன்ஜின் ரயில் சேவை!

நீலகிரியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது சுற்றுலா ஆர்வலர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

நீலகிரியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிலக்கரி நீராவி இன்ஜின் மூலம் சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில்

கடந்த, 1885-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை நீலகிரி ரயில்வே கம்பெனி மூலம் ரூ.25 லட்சம் செலவில், மலை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 250 பாலங்கள், 208 வளைவுகள், 16 குகைகள், 15 மேம்பாலங்கள் கொண்ட இந்த மலை ரயில் பாதையில், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த ரயிலுக்கு, கடந்த 2005-ம் ஆண்டில் `யுனெஸ்கோ' அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில், ரயில் இன்ஜின்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, பயணத்தில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காணும் வகையில், நான்கு பெட்டிகள் வரை இழுக்கும் இழுவைத் திறன் கொண்ட பர்னஸ் ஆயில் இன்ஜின் உருவாக்கப்பட்டு குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையில் இயக்கப்படுகிறது. மேலும், ஊட்டி - குன்னுார் இடையே புதிய டீசல் இன்ஜின்களால் ஐந்து பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இதில், 84 எண் கொண்ட ஒரே இன்ஜின் மட்டுமே உள்ளதால் இதைப் பராமரித்து மீண்டும் இயக்க மலை ரயில் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல் சேஷ்தா சமீபத்தில், ஆய்வு செய்து பாரம்பர்ய மலை ரயிலைப் பாதுகாக்கவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், `ரயில் சேவையை அதிகரிக்க, இரண்டு கூடுதல் நீராவி இன்ஜின்கள், 15 பெட்டிகள் தயாரித்து மலை ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், நிலக்கரி இன்ஜின் மூலம் ஊட்டியிலிருந்து கேத்திக்கும் குன்னுாரிலிருந்து ரன்னிமேடுக்கும் சிறப்பு ரயிலை விரைவில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. பொன்மலையில் நிலக்கரி நீராவி இன்ஜின் பராமரிப்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க