`சமூக விரோதிகள் போலீஸை அடித்ததாலேயே வன்முறை வெடித்தது!’ - ரஜினிகாந்த் ஆவேசம் | Social enemies are reason for Thoothukudi riot, says Rajinikanth

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (30/05/2018)

கடைசி தொடர்பு:17:34 (30/05/2018)

`சமூக விரோதிகள் போலீஸை அடித்ததாலேயே வன்முறை வெடித்தது!’ - ரஜினிகாந்த் ஆவேசம்

``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது சமூக விரோதிகள் காவலர்களை அடித்ததாலே கலவரமாக மாறியது'' என்று ரஜினிகாந்த் ஆவேசமாகக் கூறினார். 

ரஜினி

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்' என்று தெரிவித்திருந்தார். ரஜினிகாந்த்தின் இந்தக் கருத்துக்கு தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தன.

மேலும், சமூக வலைதளங்களிலும் ரஜினிகாந்த் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால்தான் வன்முறை வெடித்தது.

காவல்துறைமீது தாக்குதல் நடத்தினால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப்போல, ஸ்டெர்லைட் போராட்டத்திலும் கடைசி நாளில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதனால்தான் கலவரம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும்' என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.