`பெட்ரோல், டீசல் விலையை ஒரு பைசா குறைப்பதா?’ - ராகுல் காந்தி ஆவேசம்

பெட்ரோல் விலையை ஒரு பைசா குறைப்பது சிறுபிள்ளைத் தனமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

ராகுல்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினமும் மாற்றியமைத்து வருகின்றன. ஆனால்,இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் இருந்தது. இதற்குக் காரணம் கர்நாடகத் தேர்தல்தான் என அனைத்துத் தரப்பினரும் கூறி வந்தனர். தேர்தல் முடிந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை ஏகத்துக்கும் எகிறியது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.80-யையும் டீசல் ரூ.70-யையும் தாண்டியது. அதன்பின் தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே சென்றது. இது மத்திய அரசின் செயல்தான் எனப் பல அரசியல் தலைவர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். 

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ட்விட்டரில் உடல் தகுதி சம்பந்தமான ஒரு சவாலை கூறி அதைச் செய்ய முடியுமா எனப் பிரதமரிடம் கேட்டிருந்தார். அதற்கு உடனடியாகப் பிரதமரும் செய்ய முடியும் எனப் பதிலளித்திருந்தார். இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமருக்கு ஒரு சவாலை வழங்கி அதைச் செய்ய முடியுமா எனக் கேட்டிருந்தார். ராகுல் காந்தி அளித்த அந்தச் சவால் ஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோலின் விலையைத் குறைப்பது. இந்தச் சவால் பற்றிய பிரதமரின் பதிலுக்காகக் காத்திருப்பேன் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, சுமார் 16 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை இன்று ஒரு பைசா குறைந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “அன்புள்ள பிரதமரே, நீங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை ஒரு பைசா குறைத்துள்ளீர்கள். ஒரு பைசா? இது மிகவும் மோசமான மற்றும் சிறுபிள்ளைத்தனமானது. ஒரு பைசா குறைத்தது நான் கடந்த வாரம் அறிவித்த சவாலுக்கான சரியான பதில் இல்லையே” எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!