`மக்களை சமூக விரோதிகள் எனக் கூறிய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்!’ - உ.வாசுகி கண்டனம்

``ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தித் தன்னெழுச்சியாகப் போராடிய மக்களை சமூக விரோதிகள், விஷக்கிருமிகள் எனக் கொச்சைப்படுத்திப் பேசிய ரஜினி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்"என உ.வாசுகி தெரிவித்துள்ளார். 

ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் - உ.வாசுகி

தூத்துக்குடி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி தொடங்குவதாக அறிவித்த கட்டத்திலேயே, `போராடுவதற்கு என ஒரு கோஷ்டி உள்ளது. கோஷம் போடுவதற்கு என ஒரு கோஷ்டி உள்ளது. எனவே, இப்படிப்பட்டதையெல்லாம் நாம் செய்யத் தேவையில்லை’ எனக் கூறினார். ஆக, அடிப்படையிலேயே மக்கள் போராட்டத்துக்கு எதிரியாகவே அவர்  தன்னைக் வெளிக்காட்டி கொண்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த 23 ஆண்டுகால மக்களின் போராட்டங்கள், கடந்த 100 நாள்களில் அரசியல் கட்சிகள் தலையீடின்றி தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடிய போராட்டம் மிக வலிமை அடைந்தன் விளைவாக ஆலை சீல் வைக்கப்பட்டுள்ளது. `மக்களின் இப்போராட்டத்தில் சமூக விரோதிகள், விஷக் கிருமிகள் உள்ளே நுழைந்து விட்டனர்' என மக்களை இழிவாகவும் கொச்சைப் படுத்தியும் பேசி உள்ளார். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்களை இப்படிப் பேசியதற்காக அவர், தூத்துக்குடி மக்களிடம் பகிரங்கமான மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக விரோதிகள் என்றால் தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள்,  உறவினர்கள், நண்பர்களுடன் போராட்டத்தில் கலந்துகொள்ள வருவார்களா?. மக்கள்மீது வன்மையான அடக்கு முறையைக் கையாண்ட காவல்துறையும், பொறுப்பற்ற மாவட்ட நிர்வாகமும்தான் சமூக விரோதிகள். வன்முறையைத் தூண்டியதற்கு இவர்கள்தாம் காரணம்.

முதல்வர் பழனிசாமியும் மக்களின் போராட்டத்தில் சமூகவிரோதிகள் ஊடுருவி விட்டதாகவே சொல்கிறார். இச்சம்பவம் நடந்து 8 நாள்கள் ஆகின்றன. மாநிலத்தின் முதல்வர் என்கிற முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தையும், காயமடைந்தவர்களையும் நேரில் சந்திக்க அவர் தூத்துக்குடிக்கு வந்தாரா?. இந்த வன்முறைச் செயலுக்குக் காரணமான முதல்வர் எடப்பாடியை அனைத்துக் கட்சியினரும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், `ராஜினாமா செய்யச் சொல்வது தீர்வல்ல’ என ரஜினி கூறியுள்ளார். அப்படியென்றால் தீர்வு எது என அவரே கூற வேண்டும். மக்களின் போராட்டத்தை திசை திருப்பும் நோக்கிலேயே ரஜினி பேசி உள்ளார்" என்றார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!