வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (30/05/2018)

கடைசி தொடர்பு:21:20 (30/05/2018)

மோடி பேச்சைக் கேட்டு தூத்துக்குடி சென்றிருக்கிறார் ரஜினி! விடுதலைச் சிறுத்தைகள் குற்றச்சாட்டு

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கைது செய்ததைக் கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம், நாம் தமிழர், மே17 இயக்கம், பொது நல மாணவர் இயக்கம், கொங்கு இளைஞர் பேரவை என 20க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்புக் குழுவாக இணைந்து சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் பேசிய பொது நல மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி, ``தமிழ்நாட்டில் இதைவிட கொடுமையான அடக்குமுறைகள் வரும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் மரணமடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இல்லை 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். வீடு வீடாக போலீஸ் உள்ளே நுழைந்து இளைஞர்கள், பெண்களை அடித்துச் சித்ரவதை செய்து கை, கால்களை உடைத்திருக்கிறார்கள்.

வேதாந்தா என்ற உலக முதலாளியின் 10 சதவிகித ஸ்டெர்லைட் பிசினஸிற்காக 50க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்திருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் அடிமைகள் இந்த ஆட்சியாளர்கள். மாவோ சொல்வதைப்போல போராட்டம் செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அல்ல. சூழல்தான் மாற்றுகிறது. போராட்டம் செய்ய வேண்டும் என்ற சூழலை ஆட்சியாளர்கள் உருவாக்குகிறார்கள்'' என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ``ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 99 நாள்கள் மக்கள் போராடுகிறார்கள். 100வது நாள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மனுகொடுக்க வருகிறார்கள். குருவியைச் சுடுவதைப்போல குறி பார்த்துச் சுட்டிருக்கிறீர்கள். காஷ்மீர், பாகிஸ்தான் எல்லைகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளைக் கொண்டு சொந்த மக்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காகச் சுடவில்லை. கதிராமங்கலம், நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டம், சாகர்மாலா, நியூட்ரினோ என எந்தத் திட்டங்களுக்காகவும் மக்கள் போராடக் கூடாது என்று சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இது மத்திய மோடி அரசாங்கம் நேரடி உத்தரவின் பேரில் சுட்டிருக்கிறார்கள். இவ்வளவும் நடந்த பிறகு மோடியும், அமித் ஷா பேச்சைக் கேட்டு ரஜினி தூத்துக்குடி மக்களை பார்க்கச் சென்றிருக்கிறார்'' என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க