கண்ணிமைக்கும் நேரத்தில் 2 லட்சம் ரூபாயைத் திருடிய குரங்கு! நடு ரோட்டில் அதிர்ந்துபோன வாலிபர்

வங்கிக்குச் செல்லும் நபரிடமிருந்து 2 லட்சம் ரூபாயை, ஒரு குரங்கு திருடிச் சென்று கிழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குரங்கு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா ஒரு சிறப்பு மிக்க சுற்றுலாத் தலமாகும். அங்கு தாஜ்மஹால் மற்றும் நிறையக் கோட்டைகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்வது வழக்கம். பொதுவாகவே ஆக்ரா பகுதியில் குரங்குகள் அதிகமாகக் காணப்படும். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பைகளைத் திருடுவது, உணவுப் பண்டங்களை வீணடிப்பது, சுற்றுலாப் பயணிகளைத் தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கும்.

இந்நிலையில் இன்று காலை விஜய் பன்சால் என்பவர் வங்கியில் பணம் செலுத்துவதற்காக 2 லட்சம் ரூபாயை ஒரு பையில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார். அவரைப் பின் தொடர்ந்த குரங்கு ஒன்று விஜய் எதிர்பார்க்காத நேரத்தில் அவரிடமிருந்து பணப்பையைப் பிடுங்கிக்கொண்டு ஓடியுள்ளது. விஜய், குரங்கைப் பிடிக்க முயன்றபோது அது அவரிடமிருந்து தப்பி விட்டது. அறுபதாயிரம் மட்டுமே தன்னால் காப்பாற்ற முடிந்தது என்றும் மீதமுள்ள பணத்தில் பாதியைக் குரங்கு கிழித்து விட்டு மீதி பாதியுடன் தப்பிவிட்டதாக விஜய் கூறியுள்ளார்.

இது குறித்து ஆக்ரா போலீஸில் விஜய் அளித்த புகாரை அடுத்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அப்பகுதியில் வாழும் மக்களில் சிலர் இதற்காகவே பிரத்தியேகமாக குரங்குகளைத் தயார் செய்வதாகவும், வளர்த்தவரின் பேச்சைக் கேட்டு குரங்கும் அவர் சொல்லும் நபரிடம் சொல்லும் பொருளைப் பறித்து வந்துவிடும் எனவும் கூறியுள்ளனர். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு குரங்கு பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!