வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/05/2018)

கடைசி தொடர்பு:20:22 (30/05/2018)

தென்மேற்குப் பருவமழை தீவிரம்! - முதுமலையில் யானை சவாரி தற்காலிகமாக ரத்து

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதுமலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மழை

நீீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக கோடைக்காலத்தில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக உள்ளூர் மற்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். அதேபோல, வன விலங்குகளும், தண்ணீருக்காக இடம் பெயரும் நிலை ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக உரிய நேரத்தில் பருவ மழை பெய்யாத நிலையில், இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை முன் கூட்டியே தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலுார், குன்னுார், கோத்தகிரி என அனைத்துப் பகுதிகளிலும் கடந்த சில நாள்களாகப் பரவலாக மழை பெய்து வருவது, உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டு, வனப்பகுதியில் ஈரத்தன்மை அதிகரித்துள்ளது. இதில், யானைகள் நடந்து செல்வதில் சிரமம் உள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி தற்கலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. யானை சவாரி எதிர்பார்த்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், `பருவமழை தொடங்கியுள்ளதால், வனப்பகுதில் ஈரத்தன்மை ஏற்பட்டுள்ளது. யானைகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது, ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், மழையின் போது யானை சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பருவமழை முடியும் வரை, சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி காலச்சூழலைப் பொறுத்து நடக்கும்' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க