`மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!’ - கே.பாலகிருஷ்ணன் காட்டம் | CPI(M) K Balakrishnan slam Rajini

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/05/2018)

கடைசி தொடர்பு:10:24 (31/05/2018)

`மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!’ - கே.பாலகிருஷ்ணன் காட்டம்

'மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதோடு, அவர்களை சமூக விரோதிகள் எனப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர், பி.ஜே.பியின் ஊதுகுழலாகவே செயல்படுகிறார்' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார். 

கே.பாலகிருஷ்ணன்

தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த கே.பாலகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 உயிர்கள் அநியாயமாக காவு வாங்கப்பட்டுள்ளன. பலர் படுகாயங்களுடன் சிகிச்சைபெற்றுவருகின்றனர். தமிழகமே கொந்தளித்துப்போய் உள்ளது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தமிழர்கள் இந்தச் சம்பவத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த், மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசி உள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது. போராட்டக்காரர்களால்தான் பிரச்னை என்ற ரீதியில் அவர்களை வன்முறையாளர்களாகச் சித்திரித்துப் பேசியுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் வன்முறையாளர்கள், பிரிவினைவாத சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாகப் பேசுகிறார். போராட்டம் நடத்தினால் எப்படி தொழிற்சாலைகள் வரும் எனக் கேட்கிறார். ஜனநாயக ரீதியில் போராடுவதை கொச்சைப்படுத்துகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவது சரியா? காவிரிக்காக தமிழர்கள் போராடக் கூடாது என இவர் சொல்கிறாரா? போராடும் பொதுமக்களைக் கொச்சைப்படுத்தி, முதலமைச்சருக்கு சப்பைக்கட்டு கட்டி, பா.ஜ.க-வின் ஊதுகுழலாகப் பேசும் ரஜினிகாந்த்தின் பேச்சு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது . அவர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு போராடுவது தவறு என்கிறாரா?

சட்டமன்றத்தில், முதலமைச்சர் எடப்பாடி துப்பாக்கிச் சூடு பற்றி வாய்திறக்காதது வேதனை. காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்கப்படவில்லை. ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதலமைச்சர் உண்மைக்கு மாறான தகவல் தருவதை விட்டுவிட்டு, காவிரியில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்துகொண்டே போவது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு விலையை உயர்த்திவிட்டு, மாநில அரசுகள் மீது பழிபோடுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகப் போராட வேண்டாம் என ரஜினிகாந்த் சொல்வாரா? விலை உயர்வு குறித்து ரஜினி என்ன சொல்கிறார்? சட்டமன்றத்தில் ஜனநாயக விரோதச் செயல்களில் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் செயல்களில் அ.தி.மு.க அரசு செயல்பட்டுவருகிறது. அதற்காக, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சட்டமன்றப் புறக்கணிப்பு செய்யக் கூடாது. அதை மறுபரிசீலனை செய்து, ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு காவிரி வரைவுத் திட்டத்தை அரசிதழில் வெளியிடாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிரதமர் வர வேண்டும்; அதற்காகக் காத்திருக்கிறோம் என சொல்வது எந்த வகையில் நியாயம்?’’ என அவர் கூறினார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க