வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (30/05/2018)

கடைசி தொடர்பு:20:43 (30/05/2018)

``மு.க.ஸ்டாலினுக்குத் தினகரன் அழைப்பு..!’’.. சட்டமன்றத்துக்குத் திமுக வருமா..?

சட்டசபை

மிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானத்தைக் கொடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விவர அறிக்கை ஒன்றைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதை, ஏற்கமாட்டோம் என்று கூறிவிட்டு ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர். வெளியே நிருபர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், ``அமைச்சரவையைக் கூட்டி, கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த ஆலையை நிரந்தரமாக மூட முடியும். எனவே, அப்படி ஓர் அரசாணை போடும்வரை இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மாட்டோம்’’ என்றார். 

இதையடுத்து, தமிழகச் சட்டமன்றம் கூடிய அதே நேரத்தில், தேனாம்பேட்டை அறிவாலயம் கலைஞர் அரங்கில், மாதிரிச் சட்டமன்றக் கூட்டத்தை தி.மு.க இன்று நடத்தியது. அதில் பேசிய ஸ்டாலின், ``தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரணத்தொகை கொடுக்க வேண்டும்’’ என்றார். கோட்டையில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வி மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் பேசிய செம்மலை, ``அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். மெட்ரிக்குலேஷன் பள்ளிகளைத் தனியார் சுயநிதிப்பள்ளிகள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடங்க வேண்டும். உலகத்தேவைக்கு ஏற்ப ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த வேண்டும். அரசுப்  பள்ளிகளில் மாணவர்கள் வருகை குறைந்துவிட்டது என்று மூடக் கூடாது. அரசுப் பள்ளிகளின் தரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு இன்னும் நிறைய உதவிகளைச் செய்ய வேண்டும். அவர்களின் வாழ்க்கை தரம் உயர துணை நிற்க வேண்டும். தனியார் பள்ளிகள்மீது இருக்கும் மோகத்தைத் தடுக்க வேண்டும்’’ என்று பேசினார். 

ஸ்டாலின்

இதற்குப் பதில் அளித்துப்பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ``பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. 854 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரண்டு இலக்கத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது 10 என்ற எண்ணிக்கையில் உள்ளது. 10 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. இதுபற்றி முதல்வரிடம் கலந்து பேசி யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை ஒருபோதும் மூடமாட்டோம். அரசுப் பள்ளிகளில் மாணர்களை கூடுதல் எண்ணிக்கையில் சேர்க்க ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நீட், போட்டித்தேர்வு, உயர்கல்வி வழிகாட்டல், மாணவர்கள் - பெற்றோர்களுக்கு கவுன்சலிங் என்று பல வகைகளில் மாணவர்களுக்கு இந்த அரசு துணையாக இருக்கிறது. பள்ளிக் கல்வியில் நாட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. கிழியாத காகிதத்தில் 10, 12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இனி தரப்படும். தமிழ்ப் பாடத்துக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. 11, 12 ம் வகுப்புகளில் இனி அவை ஒரே தேர்வாக நடத்தப்படும்’’ என்று பதில் அளித்தார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ``உயர்கல்வியில், தேசிய சராசரி 25.2 விழுக்காடு ஆகும். ஆனால், தமிழ்நாட்டிலோ 46.9 விழுக்காடாக உள்ளது. இப்படி, மாணவர்கள் சேர்க்கையில் முன்னணியில் இருக்கிறோம். கடலூர், திருவள்ளூர், சேலம் மாவட்டங்களில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கல்லூரிகளும் இந்தக் கல்வி ஆண்டில் தொடங்கப்படும். இங்கு, 48 ஆசிரியர் பணி இடங்கள் உள்பட 135 பணி இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில், 1,321 புதிய பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில், 89 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடுதான் ஆராய்ச்சி படிப்பில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது’’ என்று சொன்னார்.

தினகரன்

சட்டமன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறுகையில், ``சட்டமன்றத்தை தி.மு.க புறக்கணித்திருப்பது நல்ல விஷயமாகத் தெரியவில்லை. தூத்துக்குடி பிரச்னையில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தி.மு.க சொல்கிறது. என்னைப் பொறுத்தவரையில் தமிழகத்துக்குத் தாமிர ஆலையே தேவையில்லை என்று சட்டம் கொண்டு வர வேண்டும். ஜனநாயக முறையில் மக்களின் பிரச்னைகளை சட்டமன்றத்தில்தான் முறையிட முடியும். எனவே, சட்டமன்றத்துக்குத் தி.மு.க வர வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்காக வாதாட வேண்டும். மாதிரி சட்டமன்றத்தில் பேச அவர்களை மக்கள் தேர்வு செய்யவில்லை. நாளையே, சட்டமன்றத்துக்கு தி.மு.க உறுப்பினர்கள் வர வேண்டும். அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

டி.டி.வி.தினகரன் கோரிக்கையை மு.க.ஸ்டாலின் ஏற்பாரா..?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்